சந்திர கிரகணம் : திருப்பதி கோவிலில் 11 மணி நேரம் நடை அடைப்பு

திருப்பதி

நாளை சந்திர கிரகணம் ஏற்பட உள்ளதால் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் 11 மணி நேரம் நடை அடைக்கப்படுகிறது.

தினந்தோறும் திருவிழா காணும் திருப்பதி கோவிலில் ஒவ்வொரு நாளும் காலை முதல் பல உற்சவ சேவைகள் நடைபெறுவது வழக்கம்.  அது தவிர பௌர்ணமி அன்று கருட சேவை நடைபெறுவது வழக்கமாகும்.   ஆனால் நாளைய தினம் பௌர்ணமி அன்று இரவு 11.54 மணியில் இருந்து 28ஆம் தேதி அதிகாலை 3.49 மணி வரை சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது.

சந்திர கிரகணத்தை ஒட்டி நாளை மாலை 5 மணி முதல் 28ஆம் தேதி காலை 4.15 மணி வரை திருப்பதி கோவில் நடை முழுவதுமாக அடைக்கபட உள்ளது.   28ஆம் தேதி அதிகாலை சுப்ரபாத சேவையுடன் அதிகாலை 4.15 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது.  அதன் பிறகு கோவிலுக்கு சுத்திகரிப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.  அதன் பின்னர் தோமாலை, பஞ்சாங்கம், அர்ச்சனை ஆகிய சேவைகளுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

அந்த சேவைகளுக்கு பிறகு காலை 7 மணி முதல் பக்தர்கள் இலவச சேவைக்கு அனுமதிக்கப்படுவார்கள்.   கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை உள்ளிட்ட அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.    அத்துடன் கருட சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாளை மாலை 5 மணி முதல் 28ஆம் தேதி காலை 9 மணி வரை அன்னப் பிரசாத கூடம் மூடப்படுகிறது.  அத்துடன் வைகுண்டம் காத்திருப்பு அறை, பணியாளர்கள் விடுதி,  பத்மாவது மாளிகை, வெங்கடேஸ்வரா ஓய்வறை உள்ளிட்ட  இடங்களிலும் பக்தர்களுக்கு இந்த நேரத்தில் பிரசாதம் வழங்கப்பட மாட்டாது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Due to lunar eclipse thirupathi temple will be closed for 11 hours
-=-