Random image

இன்று மொகரம் பண்டிகை : காஷ்மீரில் 144 தடை உத்தரவு

ஸ்ரீநகர்

மொகரம் பண்டிகையை முன்னிட்டு இன்று காஷ்மீர் மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மொகரம் மாதம் என்பது இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதம் ஆகும்.  இந்த மாதத்தின் பத்தாம் நாள் மொகரம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.  ஹல்ரத் ஹுசைன் என்னும் இஸ்லாமியர் போரில் இந்த மாதத்தின் 10 ஆம் நாளில் மரணம் அடைந்ததை ஒட்டி இந்த மொகரம் பண்டிகை துக்க நாளாக கொண்டாடப்படுகிறது.   இந்நாளில் ஹுசைன் மரணத்தை ஒட்டி மாபெரும் துக்க ஆர்பாட்ட ஊர்வலங்கள் நடைபெறுவது வழக்கம்.   ஊர்வலத்தில் கலந்துக் கொள்வோர் தங்களை தாங்களே அடித்துக் கொள்வார்கள்.

இந்த மொகரம் பண்டிகை இன்று (20/08/2018) அன்று கொண்டாடப்படுகிறது.    மொகரம் ஊர்வலத்தின் போது கலவரம் ஏற்படும் என்னும் அச்சத்தில் காஷ்மீர் மாநிலத்தில் பல இடங்களில் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   முன் எச்சரிக்கை காரணமாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தடை உத்தரவு காரணமாக காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் நேற்று முதல் மூடப்பட்டன.   தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இடங்களில் உள்ள கடை மற்றும் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.     மாநிலத்தின் பல  முக்கிய சாலைகளில் வாகனப் போக்கு வரத்து முழுமையாக நிறுத்தப்பட்டு காஷ்மீர் மாநிலம் வெறிச்சோடி உள்ளது.