டில்லி

நாடெங்கும் கொரோன வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள தேசிய ஊரடங்கால் காற்று மாசு வெகுவாக குறைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது.

கடந்த சில காலமாக இந்தியாவில் பல நகரங்களில் காற்று மாசு அதிகரித்து வருகிறது.   பல பெருநகரங்களில் மட்டுமின்றி சிறு நகரங்களில் மாசுக்குக் காரணம்  வாகனம் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளி வரும் நச்சுப் புகை ஆகும்.  இதைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் எவ்வித பயனும் அளிக்கவில்லை.

சீனாவில் ஒரு மூலையில் இருந்த வுகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி உலகத்தின் ஒரு இண்டு இடுக்கைக் கூட விட்டு வைக்காமல் உள்ளது.   இந்தியாவில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  கடந்த 24 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும்.

இந்த ஊரடங்கு காரணமாக வாகனம் மற்றும் ரயில்வே, போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.   இதனால் அரசு வாகனங்கள் மட்டுமின்றி தனியார் வாகன போக்குவரத்தும் குறைந்து போனதால் சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.  தொழிற்சாலைகளும் முழுவதுமாக இயங்கவில்லை.  எனவே நச்சுப் புகை வெளியாவது அடியோடு நின்று காற்று மாசு வெகுவாக குறைந்துள்ளது.

வட இந்தியாவில் அதிக மாசு உள்ளதாக கூறப்பட்ட டில்லி, குருகிராம், நொய்டா, ஃபரிதாபத், காசியாபாத் உள்ளிட்ட இடங்களில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சோதனை செய்துள்ளது.  அதில் மாசு வெகுவாக குறைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டதாக வாரியம் அறிவித்துள்ளது.  இதே நிலை பல தொழில் நகரங்களிலும் உள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.