விஜயவாடா: ஆந்திர மாநிலத்தில் இயங்கும் தனியார் நிறுவனங்கள் தங்களுடைய பணிகளில் 75%ஐ உள்ளூர் நபர்களுக்கே வழங்க வேண்டுமென்ற மாநில அரசின் சட்டத்தால், அம்மாநிலத்தில் இயங்கும் சில நிறுவனங்கள் தமிழகத்திற்கு இடம்மாற விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ஆந்திர அரசின் புதிய சட்டத்தை சில நிறுவனங்கள் தங்களுக்கான நெருக்கடியாக உணர்கின்றன. எனவே, தமிழ்நாட்டிற்கு இடம்பெயர்வது குறித்து அவை யோசித்து வருகின்றன. இதுசம்பந்தமாக, தமிழக அரசு அதிகாரிகளிடம் அவை தங்களின் விசாரணையை துவக்கியுள்ளன.

ஆனால், இது ஒரு ஆரம்ப கட்டம் மட்டுமே என்பதால், எந்தெந்த நிறுவனங்கள் இப்படியான விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளன என்பதை வெளியிடுவது பொருத்தமானதாக இராது என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேசமயம், தொழில் நடத்துவதற்கு ஆந்திராவைவிட தமிழகம் சிறந்த மாநிலம் என்று அந்நிறுவனங்கள் கருத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம், இந்நிறுவனங்களில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் பெரியளவில் ஈடுபட்டுவரும் ஒரு நிறுவனமும் அடக்கம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.