துருவச் சுழல் (POLAR VORTEX) காரணமாக பனியில் மூழ்கும் அமெரிக்கா

சிகாகோ

துருவச் சுழல் காரணமாக அடிக்கும் கடுமையான குளிர் காற்றினால் அமெரிக்காவின் பல மாநிலங்கள் பனியில் மூழ்கி உள்ளன.

துருவச் சுழல் காரணமாக ஆர்க்டிக் பகுதியில் இருந்து கடுமையான குளிர் காற்று வீசி வருகிறது. இது அமெரிக்காவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் குறிப்பாக மத்திய மேற்கு மாநிலங்களில் இந்த தாக்கம் கடுமையாக இருக்கிறது. நேற்று இதன் தாக்கம் மிகவும் அதிகரித்ததால் மக்கள் கடும் துயரம் அடைந்துள்ளனர்.

சிகாகோ நகரில் மைனஸ் 14 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருந்துள்ளது. அதாவது உறைநிலைக்கும் 14 டிகிரி கீழே வெப்பம் பதிவாகி உள்ளது. மினியா போலிஸ் நகரில் மைனஸ் 29 டிகிரி செல்சியஸாக வெப்பம் குறைந்ததால் மக்கள் மிகவும் துயருற்றுள்ளனர். சிகாகோ நதி மற்றும் மிச்சிகன் ஏரி ஆகிய இடங்களில் தண்ணீர் பாறையாக உறைந்துள்ளது.

துருவச் சுழல் கார்ணமாக தற்போது அடித்து வரும் குளிர் காற்று மக்களின் முதுகை சில்லிட வைக்கிறது. நான்கு சுவெட்டர்கள் அணிந்தும் குளிரை சமாளிக்க முடியாமல் நடுங்கிய படி மக்கள் உள்ளனர். நகரில் பல இடங்களில் ஆறு இஞ்சுகள் உயரத்துக்கு பனி படர்ந்துள்ளது. இன்று இதே நிலை நீடித்தால் நகரின் பல இடங்கள் பனியில் மூழ்கி விடும் என அஞ்சப்படுகிறது.

அனைத்து வரத்தக நிறுவனங்கள் மற்றும் கடைகளும் மூடப்பட்டுள்ளன. ஆயினும் குளிரில் வாடும் மக்கள் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு சில மதுக்கடைகள் மட்டும் திறந்துள்ளன.