கடும் மாசு : டில்லியில் இன்று இந்தியா – வங்கதேச முதல் டி20 போட்டி நடக்குமா?

டில்லி

டில்லி நகரில் நிலவும் கடுமையான காற்று மாசு மற்றும் புகையால் இன்று இந்தியா வங்கதேசம் இடையே நடக்கும் முதல் டி20 போட்டி நட்ப்பது சந்தேகம் என கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக டில்லியில் காற்று, புகை மாசு உச்சக் கட்டத்தையும் தாண்டி இருக்கிறது. இன்று காற்றுமாசுக் குறியீடு 600 புள்ளிக்குளுக்கு மேல் சென்று மக்கள் சுவாசிக்கத் தகுதியற்ற நிலையை எட்டியுள்ளதால்  வரும் 5-ம் தேதிவரை டெல்லியில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் எந்தவிதமான கட்டிடப் பணிகளும் செய்வதற்குச் சுற்றுச்சூழல் மாசுக்கட்டுப்பாட்டு ஆணையம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில்  இன்று மாலை 6 மணிக்கு மேல் இந்தியா, வங்கதேசம் இடையே டி20 போட்டி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடக்க உள்ளது.  தற்போதுள்ள மோசமான சூழலில் பந்துவீச்சாளர்கள் பந்துவீசினால் பேட்ஸ்மேன்கள் கண்களுக்குப் பந்து தெரியுமா என்ற சந்தேகம் ஆடுகள வடிவமைப்பாளர்களுக்கு எழுந்துள்ளது.   எனவே  இந்தியா, வங்கதேசம் இடையிலான இன்றைய முதலாவது டி20 போட்டியை இன்று நடத்துவது சந்தேகத்துக்குரிய விஷயமாக மாறியுள்ளது.

வலைப் பயிற்சியின் போது வங்கதேச மற்றும் இந்திய அணி வீரர்கள் முகத்தில் சுவாசக் காப்பு அணிந்து பயிற்சியில் ஈடுபட்டார்கள். சென்ற 3 நாட்களாகப் புகை மாசு குறையாமல் இருந்து வரும் நிலையில் தற்போது நிலைமை மிகவும் மோசமாகி இருக்கிறது.  ஆகவே போட்டி நடக்கும் முன் டெல்லியில் உள்ள சூழல் குறித்து ஆய்வு செய்த பின் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிய வந்துள்ளது.  ஆனால் போட்டி நடத்துவதில் எந்தவிதமான இரண்டாம் கருத்துக்கே இடமில்லை எனவும். திட்டமிட்டபடி போட்டி நடக்கும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.