முந்தைய அனுபவ எதிரொலி : புதிய ஒப்பந்ததாரரை நியமித்த சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம்

சென்னை

தாமதத்தை தவிர்க்கச் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் பழைய ஒப்பந்தங்களை ரத்து செய்து புது ஒப்பந்ததாரரை நியமித்துள்ளது.

சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டது.  இதில் முதல் கட்டமாக வண்ணாரப்பேட்டை – விமானநிலையம் – கோயம்பேடு – வண்ணாரப்பேட்டை என்னும் தடத்தில் தற்போது மெட்ரோ ரெயில் இயங்கி வருகிறது.   இந்த முதல் கட்டத்தை முடிக்க சுமார் 10 வருடங்களுக்கு மேல் ஆனது.

இந்த தாமதத்தால் பலரும் திட்டத்தைக் குறித்து கடும் விமர்சனம் எழுப்பினர்.  இந்த தடத்தில் சுமார் 1 வருடத்துக்கும் மேலாக அண்ணா சாலையில் நடைபெற்ற நிலத்தடி பாதை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.  இந்த பாதை அமைப்பு பணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட ரஷ்ய நிறுவனம் நிதி நெருக்கடி காரணமாக பணியை நிறுத்தியது.   அதன் பிறகு புதிய ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு பணிகள் நிறைவேற்றப்பட்டன.

இந்த முதல் கட்ட பணிகள் அனைத்தும் ஒரே ஒப்பந்ததாரருக்கு முதலில் அளிக்கப்பட்டதும் பணி தாமதத்துக்கு காரணம் எனக் கூறப்பட்டது.   இவ்வாறு 45 கிமீ தூரத்துக்கு  ரெயில் பாதை அமைக்க 10 வருடங்கள் ஆகி உள்ளன.  இந்நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயிலுக்காக 118.9 கிமீ தூரப் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.

சென்ற முறை ஏற்பட்ட தாமதம் காரணமாக இம்முறை சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம்  இந்த பணிகளைப் பலருக்குப் பிரித்து அளிக்கத் திட்டமிட்டுள்ளது.  அதன்படி இரண்டாம் கட்டத்தின் முதல் பகுதியாக கெல்லிஸ் மற்றும் தரமணி சாலைக்கு இடையிலான 12 கிமீ தூரம் மற்றும் வேணுகோபால் நகர் மற்றும் கெல்லிஸ் இடையிலான 9 கிமீ தூரத்துக்கு  ரெயில் பாதை அமைக்க ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

அத்துடன் இந்த முறை ஒப்பந்தம் அளிக்கும் போதே சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துப் பல ஒப்பந்ததாரர்களுக்கு அளிக்க  முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.  ஒரு ஒப்பந்ததாரர் குறிப்பிட்ட கால கட்டத்தில் குறிப்பிட்ட பகுதிகள முடித்தால் மட்டுமே அவருக்கு அடுத்த பகுதிக்கான ஒப்பந்தம் முடிவு செய்யப்படும் என விதிமுறைகள் எழுப்பப்பட்டுள்ளன.

அத்துடன் முதல் கட்ட விரிவாக்கப் பணிகளைத் தாமதமாகச் செய்த ஒப்பந்ததாரர்களுக்கு ஏற்கனவே வழங்கிய ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு புதிய ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இந்த ஒப்பந்தங்களும் பிரிக்கப்பட்டுப் பல ஒப்பந்த தாரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன.    அத்துடன் ஒப்பந்த தாரர்களுக்கு நிதி தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க பணிகள் முடிந்த உடன் தவணைத் தொகை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.