நாகாலாந்து :  போராட்டத்தினால் பெயரிடப்படாத ஆற்றில் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு

திமாப்பூர், நாகாலாந்து

நாகாலாந்து மக்களின் போராட்டத்தினால் வாஜ்பாய் அஸ்தி பெயரிடப்படாத ஒரு சிறு நதியில் கரைக்கப்பட்டுள்ளது.

மறைந்த வாஜ்பாயின் அஸ்தி நாடெங்கும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள நதிகளில் கரைக்கப்பட்டு வருகிறது.    ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பாஜக தலைவர்களிடம் அஸ்தி கலசங்கள் அளிக்கப்பட்டன.    அவ்வாறு நாகாலந்து மாநில பாஜக தலைவர் தெம்ஜின் இன்மா விடம் அளிக்கப்பட்டது.   அவர் அதை நாகாலாந்தின் மிகப்பெரிய நதியான தோயாங் நதியில் கரைக்க திட்டமிட்டார்.

நாகாலாந்து மாநில வழக்கப்படி அஸ்தியை ஆற்றில் கரைப்பது அவர்களுடைய மத பழக்கங்களுக்கு எதிரானது ஆகும்.   அதனால் மாநில கங்கிரஸ் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.    இது நாகாலாந்து மக்களின் வாழ்க்கை முறைக்கு எதிரானது என தெரிவித்தது.   மேலும் நாகாலாந்து கிருத்துவ ஒருங்கிணைந்த அமைப்பும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.    பாஜக தனது அரசியல் ஆதாயத்துக்காக இவ்வாறு நடந்துக் கொள்வதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.

அதை ஒட்டி பாஜகவினர் வாஜ்பாய் அஸ்தியை நாகாலாந்தின் திமாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பெயரிடப்படாத சிறு நதியில் கரைத்துள்ளனர்.  இதுகுறித்து பஜக தலைவர் தமது கட்சி மக்களுடைய மனத்தாங்கலை மதிப்பதாகவும் அதனால் அஸ்தி கரைப்பை ஒரு சிறு  நதியில் நிகழ்த்தியதாகவும் தெரிவித்துள்ள்ளார்.