மழையின் எதிரொலி : பணமதிப்புக் குறைப்பு எதிர்ப்பு போராட்டத்தை திமுக நிறுத்தி வைத்தது

சென்னை

டும் மழையை காரணம் காட்டி நாளை நடைபெற இருந்த கருப்பு தின போராட்டங்களை தி மு க நிறுத்தி வைத்துள்ளது.

கடந்த வருடம் பண மதிப்புக் குறைப்பு திட்டத்தை நரேந்திர மோடி அறிவித்தார்.  அந்த அறிவிப்பு வந்து ஒரு வருடம் ஆவதால் அனைத்து எதிர்க்கட்சிகளும் நாளை கருப்பு தினம் என அறிவித்து போராட்டங்கள் நடத்த உத்தேசித்திருந்தது.   தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான தி மு கவும் இந்த போராட்டங்களில் கலந்துக் கொள்ளப் போவதாக அறிவித்திருந்தது.

தற்போது தி மு க நாளை நடைபெற இருந்த போராட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.   தமிழகம் எங்கும் கடும் மழை பெய்து வருவதாலும்,  பல இடங்களில் மழை நீர் தேங்கி மக்கள் கடும் அவதிக்குள்ளாகுவதாலும் இந்த போராட்டங்கள் நிறுத்தப்பட்டதாக தி மு க தெரிவித்திருந்தது.     தி மு க வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தங்கள் கட்சி நாளைய தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து போராட்டங்கள் நடத்தும் என தெரிவித்தன.

அரசியல் நோக்கர்கள் நேற்று சென்ன வந்த பிரதமர் மோடி,  திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்ததையும் இன்று போராட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளனர்.   ஆனால் தி மு க தரப்பில் மோடி – கருணாநிதி சந்திப்பில் எந்த அரசியலும் இல்லை எனவும்  மோடி கருணாநிதி இல்லத்தில் இருந்த 12 நிமிடங்களில் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை எனவும் தெரிவிக்கப் படுகிறது.