கொரோனா கட்டுப்பாட்டால் பயணிகள் குறைவு : ரயில்கள் ரத்து

சென்னை

கொரோனா கட்டுப்பாட்டால் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் 4 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலை பரவலால் நாடு முழுவதும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இந்தியாவில் தினசரி பாதிப்பு 3.5 லட்சத்தைத் தாண்டி உலக அளவில் முதல் இடத்தில் உள்ளது.   இதையொட்டி நாடெங்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பல மாநிலங்களில் வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கும் வேறு மாவட்டங்களுக்குள் செல்வோருக்குமான விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.   இதையொட்டி பல பயணிகள் தங்கள் பயணங்களை ரத்து செய்துள்ளனர்.  பல ரயில்களில் தற்போது பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதையொட்டி தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“பயணிகள் வருகை குறைவால் கீழே காணப்படும் 4 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

  1. பெங்களூரு – நாகர்கோவில் இடையிலான சிறப்பு ரயில் (07235) வரும் 5 ஆம் தேதியில் இருந்து முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
  2. நாகர்கோவில் – பெங்களூரு சிறப்பு ரயில் (07236) 6ஆம் தேதியில் இருந்து முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
  3. யஷ்வந்த்பூர் – கண்ணனூர் சிறப்பு ரயில் (6537) இன்று முதல் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது
  4. கண்ணனூர் – யஷ்வந்த்பூர் சிறப்பு ரயில் 5 ஆம் தேதி முதல் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது”

என அறிவிக்கப்பட்டுள்ளது.