ரியா சக்ரபோர்த்தியின் போதை மருந்து வழக்கு மதிப்பிழப்பு  : வழக்கறிஞர் கருத்து

மும்பை

ச்சநீதிமன்றம் போதை மருந்து வழக்கு வாக்குமூலம் குறித்து அளித்த தீர்ப்பால் ரியா சக்ரபோர்த்தியின் வழக்கு மதிப்பிழந்துள்ளதாக அவர் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை தற்கொலைக்குத் தூண்டியதாக அவர் காதலியும் நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மீது குற்றம் சாட்டப்பட்டது.    அதன்  பிறகு அவருடைய வாட்ஸ் அப் உரையாடலை ஆய்ந்து அவருக்குப் போதை மருந்து தடுப்புத்துறை சம்மன் அனுப்பியது.  அவர் மூன்று நாட்கள் போதை மருந்து தடுப்பு சட்டம் பிரிவு 37 இன் கீழ் விசாரிக்கப்பட்டார்.

அதன் பிறகு சுஷாந்த் சிங் குக்கு ரியா போதை மருந்தை அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். ரியாவின் சார்பாக வழக்கறிஞர் சதீஷ் மான்ஷிண்டே என்பவர் ஆஜராகி வருகிறார்.  கைது செய்யப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும் ரியாவுக்கு இன்னும் ஜாமீன் வழங்கப்படாத நிலை உள்ளது.

 இந்நிலையில் உச்சநீதிமன்றம் சமீபத்தில் வேறு ஒரு வழக்கில் அளித்த தீர்ப்பில் போதை மருந்து தடை சட்டம் பிரிவு 37இன் கீழ் அளிக்கப்படும் வாக்குமூலங்களை வழக்கு விசாரணையில் பயன்படுத்தக் கூடாது என கூறப்பட்டுள்ளது.  இந்த தீர்ப்பு ரியா சக்ரபோர்த்தியின் வழக்கில் ஒரு புதிய பாதையை உருவாக்கி உள்ளது.

ரியாவின் வழக்கறிஞர் சதீஷ் மான்ஷிண்டே,”உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி போதை மருந்து தடை சட்டம் பிரிவு 37 இன் கீழ் அளிக்கப்பட்ட வாக்குமூலங்களை வழக்கு விசாரணையில் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  சுஷாந்த் சிங் வழக்கில் ரியா இந்த பிரிவின் கீழ் அளிக்கப்பட்டுள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எனவே ரியாவின் வழக்கு இந்த தீர்ப்பினால் மதிப்பிழந்துள்ளது.  சரித்திர புகழ் வாய்ந்த இந்த தீர்ப்பினால் பல குற்றம் சாட்டப்பட்டோர் வழக்கில் ஒளி கிடைத்துள்ளது.  மேலும் இந்த தீர்ப்பின் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாரிமன் மற்றும் நவின் சின்கா மனித உரிமை போராளிகள் பலருக்கும் நன்மையை அளித்துள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.