டில்லி

ட இந்தியாவில் பல பகுதிகளில் கடும் காற்று மாசு நிலவுவதால் காற்று சுத்திகரிப்பான் விற்பனை 60% வரை உயர்ந்துள்ளன.

வட இந்தியாவில் உள்ள டில்லி உள்ளிட்ட பல நகரங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது.   மக்கள் சாலையில் முகமூடியுடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.   குறிப்பாக அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை இந்த பகுதிகளில் பனி மூட்டம்  போல மாசு காணப்படுகிறது,  இதனால் பல இல்லங்களில் காற்று சுத்திகரிப்பான் வீட்டு உபயோகப் பொருட்களில் ஒன்றாக ஆகி விட்டது.

இந்த காற்று சுத்திகரிப்பான் வெளியில் உள்ள காற்றில் உள்ள மாசுகளைச் சுத்தம் செய்து இல்லத்தினுள் அனுப்புகிறது.  அத்துடன் காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும் நிலையில் மாசு அதிகரிக்கும் என்பதால் இந்த கருவிகள் ஈரப்பதத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றன.  தற்போது இந்த கருவிகள் டில்லி போன்ற பெரு நகரங்களில் மட்டும் இன்றி இரண்டாம் கட்ட நகரங்களான கான்பூர், லக்னோ போன்ற இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

தற்போது விற்பனையாகும் காற்று சுத்திகரிப்பான்களில் பாதிக்கும் மேல் வட இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன.  இதற்கு அடுத்த படியாகக் கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.   இந்த காற்று சுத்திகரிப்பானை பிலிப்ஸ், புளூ ஏர், பானசோனிக், யுரேகா ஃபோர்ப்ஸ், ஷார்ப், புளு ஸ்டார் உள்ளிட்ட  பல நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

பிலிப்ஸ் நிறுவனத்தின் இந்தியப் பகுதி துணைத் தலைவர் குல்பகர், “இந்த வருடம் இந்தியாவில் காற்று சுத்திகரிப்பான் ரூ.450 கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது.   இது முன்பு எப்போதைக் காட்டிலும் 60% அதிக விற்பனை ஆகும்.” எனத் தெரிவித்துள்ளார்.   இதைப் போலவே ஷார்ப் நிறுவனம், யுரேகா ஃபோர்ப்ஸ், புளூ ஸ்டார் உள்ளிட்ட நிறுவனங்களின் செய்தி தொடர்பாளர்களும் தங்கள் நிறுவன காற்று சுத்திகரிப்பான் விற்பனை 37% முதல் 60% வரை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.