ஆபாச படமெடுத்து பாலியல் தொல்லை.. அண்ணன்களாலேயே தூக்கில் தொங்கிய தங்கை.. 

ஆபாச படமெடுத்து பாலியல் தொல்லை.. அண்ணன்களாலேயே தூக்கில் தொங்கிய தங்கை..

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த நைனார் குப்பத்தைச் சேர்ந்தவர் இந்திரா. கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தற்கொலை வழக்குப் பதிவு செய்த செய்யூர் காவல் நிலைய போலீசார் இந்திராவின் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் இந்த விவகாரத்தில் தற்போது அதிர்ச்சி தரும் ஓர்  திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்திராவின் சகோதரர் இது பற்றிக் காவல் நிலையத்தில் புகார் அளிக்க விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்திராவின் பெரியப்பா மகன்களான புருசோத்தமன் மற்றும் தேவேந்திரன் இருவரும் இந்திரா குளிக்கும்போது அதனை செல்போனில் படம் பிடித்துள்ளனர்.  அந்த படத்தைக் காட்டி இருவரும் இந்திராவுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.  தங்கள் ஆசைக்கு உடன்படாவிட்டால் செல்போனில் எடுத்த படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாகக் கூறி தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர்.  இதற்கிடையே இந்திராவுக்குத் திருமண ஏற்பாடுகள் தொடங்கிய நிலையில், புருசோத்தமன் மற்றும் தேவேந்திரனின் மிரட்டல்கள் அதிகமாகி உள்ளது.

இந்நிலையில் இந்திரா மட்டுமே வீட்டில் இருந்த சமயத்தில், அங்கே புருஷோத்தமன் சென்றுள்ளார்.  அப்போது திருமணத்திற்கு ஒப்புக்கொண்டால் இந்த படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது.  இதனால் செய்வதறியாத இந்திரா உடனே தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  இதையறிந்த புருஷோத்தமன் உடனே அக்கம் பக்கத்தினரிடம் கூறவும், அனைவரும் ஓடிச் சென்று பார்த்தபோது இந்திரா சடலமாகத் தொங்கிக் கொண்டிருந்துள்ளார்.

புருசோத்தமனும் தேவேந்திரனும் இந்திராவைக் கொலை செய்து சடலத்தைத் தூக்கில் தொங்க விட்டதாகவும் அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திராவின் சகோதரர் அருண்பாபு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அடக்கம் செய்யப்பட்ட தங்கையின் சடலத்தை மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.  ஆனால் காவல் துறையினரோ புருசோத்தமன் மற்றும் தேவேந்திரன் மீது இந்திராவைத் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கு பதிவு செய்தனர்.

நல்ல வாழ்க்கையினை அமைத்துத் தரவேண்டிய அண்ணன்களே இதைப் போன்ற ஒரு பாதகச் செயலில் ஈடுபட்டு அப்பெண்ணின் தற்கொலைக்கு காரணமான அவலம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

– லெட்சுமி பிரியா