டில்லி

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த வரிச்சலுகையால் மத்திய அரசுக்கு நேரடி வரி வருவாயில் ரூ.2.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட உள்ளது.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்ற வெள்ளிக்கிழமை அன்று நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் கார்பரேட் வரி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்தார். அதன்படி நிறுவனங்கள் செலுத்த வேண்டிய மொத்த கார்பரேட் வ்ரி 30% ஆக இருந்தது தற்போது 27.1 % ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்களுக்குப் பயன் ஏற்படும் என்பதால் முதலீடுகள் அதிகரிக்கும் என நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார். அதற்கேற்ப தற்போது பங்குகளின் விலை உயர்ந்து மதிப்பு அதிகரித்துள்ளது.

இந்த வருடத்துக்கான நேரடி வரி வருவாயாக ரூ.13.35 லட்சம் கோடி வரும் என அரசு திட்டமிட்டிருந்தது. இதில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் ரூ. 5.25 லட்சம் கோடி மட்டுமே வருவாய் வந்துள்ளது. இதே விகிதத்தில் இந்த ஆண்டு இறுதியில் எதிர்பார்த்த அளவு வருமானம் வர வாய்ப்பில்லை என கணக்கிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கார்பரேட் வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

எனவே வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் இந்த வருட இறுதியில் நேரடி வரி வருவாயில் சுமார் ரூ.2.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த வரிச்சலுகைக்கு முன்பு வருமானம் ரூ. 1 லட்சம் கோடி குறையும் எனக் கணக்கிடப்பட்டிருந்ததாகவும் வரிச்சலுகைக்குப் பிறகு மேலும் ரூ.1.45 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறி உள்ளார்.