இந்தியாவில் இரு மடங்கான கொரோனா பாதிப்பு : தப்லிகி கூட்ட விளைவு

டில்லி

ப்லிகி கூட்ட விளைவால் கடந்த 3 நாட்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரு மடங்காகி உள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.   இதைக் கட்டுப்படுத்த அரசு 21 நாட்கள் தேசிய ஊரடங்கை அறிவித்துள்ளது.  ஆயினும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  கடந்த 24 மணி நேரத்தில் 478 பேர் பாதிப்பு அடைந்துள்ளது கண்டறியப்பட்டது.  இது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாகும்.

கடந்த மார்ச் மாதம் 31 அன்று1251 பேர் இந்தியாவில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அந்த எண்ணிக்கை இருமடங்காகி 2547 ஆக உயர்ந்துள்ளது.  இந்த எண்ணிக்கையில் 25% பேர் டில்லி தப்லிகி ஜமாத் கூட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் ஆகும்.  நேற்று கண்டறியப்பட்ட புதிய நோயாளிகள் 478 பேரி 247 பேர் டில்லியில் நடந்த தப்லிகி ஜமாத் கூட்டத்தில்  கலந்துக் கொண்டவர்கள் ஆவார்கள்.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணைச்செயலர் லவ் அகர்வால், “இந்தியாவில் 14 மாநிலங்களில் உள்ள 647 கொரோனா நோயாளிகள் தப்லிகி ஜமாத் கூட்டத்துடன் தொடர்புடையவர்கள் ஆவார்கள்.  வியாழக்கிழமை இந்த எண்ணிக்கை 400 ஆக இருந்தது.  பல மாநிலங்களில் இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் கொரோனா தாக்கம் குறையத் தொடங்கி இருந்தது.  இதற்கு முக்கிய காரணம் தேசிய ஊரடங்கு மற்றும் சமுதாய இடைவெளி ஆகியவை ஆகும்.  ஆனால் தற்போது தப்லிகி ஜமாத் கூட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் மூலம் பாதிப்பு அதிகரித்துள்ளது.

 

இந்த கூட்டத்தின் மூலம் டில்லி, அந்தமான், அசாம், இமாசலப் பிரதேசம், அரியானா, ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகா, தமிழ்நாடு, ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தர காண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட 1200 பேர் சோதனை செய்யப்பட்டு 303 பேருக்குப் பாதிப்பு இல்லை.  மீதி முடிவு வரவேண்டியது உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.