பெங்களூரு

கர்நாடக மாநிலம் மங்களூரு நகர விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில் நேற்று ஆர் எஸ் எஸ் தொண்டர் ஆதித்ய ராவ் சரண் அடைந்துள்ளார்.

கடந்த திங்கள்கிழமை காலை மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில்  கேட்பாரற்று கிடந்த பையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டும் குண்டு தயாரிக்கத் தேவையான பொருட்களும் கிடைத்தன.   இதைக் கைப்பற்றிய தேசியப் பாதுகாப்புப் படையினர் ஆளில்லா இடத்தில் அந்த வெடிகுண்டை வெடிக்க வைத்து குண்டு வைத்தவரைத் தனிப்படைகள் அமைத்துத் தேடி வந்தனர்.

விமான நிலைய கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்த குற்றவாளியின் புகைப்படத்தையும், விமான நிலையத்துக்கு அவர் வந்த ஆட்டோவின் பதிவு எண்ணையும் காவல்துறையினர் அறிவித்தனர்.  நேற்று முன் தினம் மாலை ஆட்டோ ஓட்டுநர் மஞ்சுநாத் என்பவர் தாமே வந்து சரண் அடைந்தார்.  ஆட்டோவில்  பயணம் செய்தவர் உடுப்பியைச் சேர்ந்த துளு மொழி பேசுபவர் எனத் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் தனிப்படையினர்  உடுப்பி, மங்களூரு, கோவா,  கேரளா போன்ற பல  இடங்களில் குற்றவாளியைத் தேடி வந்தனர்.  நேற்று பெங்களூரு நகரில் ஆதித்ய ராவ் என்பவர் நகர காவல்துறை டிஜிபி நீலமணி ராஜு ,ஆணையர் பாஸ்கர் ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் சரண் அடைந்தார்.  காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

காவல்துறை சார்பில், “ஆதித்ய ராவ் மங்களூரு விமான நிலையத்தில்  குண்டு வைத்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.   தமக்கு எந்த தீவிரவாத இயக்கத்துடனும் தொடர்பு இல்லை எனத் தெரிவித்துள்ளார். இவர் ஆர் எஸ் எஸ் அமைப்பின் உறுப்பினர் ஆவார்.  பஜ்ரங் தள் உள்ளிட்ட சில இந்துத்துவ அமைப்புக்களுடன் தொடர்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஆதித்ய ராவ் எம்பிஏ படித்தும்  வேலை கிடைக்காத விரக்தியில் குண்டு வைத்துள்ளார்.  யு டியூப் மூலம் இவர் வெடிகுண்டு தயாரித்துள்ளார்.  இவர் ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு பெங்களூரு சர்வதேச விமானநிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைதாகி பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  சென்ற ஆண்டு பெங்களூரு ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைதாகி உள்ளார்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.