ன்னாவ்

த்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் பாதுகாப்பின்றி ஊசிகள் போடப்படுவதால் எச் ஐ வி அதிகரிப்பதாக இந்திய மருத்துவ ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னால் மாவட்டத்தில் கடந்த ஐந்து வருடங்களாக எச் ஐ வி நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர்.  குறிப்பாக 2017-18 ஆம் வருடம் இந்த அதிகரிப்பு மிகவும் மோசமாக உள்ளது.  இதையொட்டி இந்திய மருத்துவ ஆய்வுக் குழு (ஐ சி எம் ஆர்) சோதனை ஒன்றை நடத்தி உள்ளது.  இந்த சோதனை உன்னாவ் மாவட்டத்தில் எச் ஐ வி நோயாளிகள் அதிகம் உள்ள பிரேம்கஞ்ச், கரீமுதீன்பூர், சாக்மீராப்பூர் ஆகிய பகுதிகளில் நடந்துள்ளது.

கடந்த நவம்பர் 2017 முதல் ஏப்ரல் 2018 வரை பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் இந்த சோதனை நடந்துள்ளது.   இவர்களிடம் நடந்த நேர்காணலின் அடிப்படையில் இவர்களில் பெரும்பாலானோருக்கு பாலியல் உறவு காரணமாக இந்த தொற்று உண்டாகவில்லை என்பது தெரிய வந்துள்ளது.  மாறாக இவர்களில் பெரும்பாலானோருக்குப் பாதுகாப்பற்ற ஊசிகள் செலுத்தப்பட்டதால் தொற்று ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஐ சி எம் ஆர் அமைப்பின் சமிரான் பண்டா, “இந்த ஆய்வின் மூலம் பாதுகாப்பற்ற ஊசிகளை மக்களுக்கு அளிப்பதால் ஏற்படும் அபாயங்கள் தெரிய வந்துள்ளது.   எனவே ஒரு முறை பயன்படுத்திய ஊசிகளையும் சிரிஞ்சுகளையும் மீண்டும் பயன்படுத்தக்கூடாது என்பதை மருத்துவர்கள் பின்பற்ற வேண்டும்.  இதை உள்ளூர் அமைப்புக்கள் கண்காணிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.