சென்னை

வாகன விற்பனை சரிவு காரணமாக தமிழகத்தில் வாகன உற்பத்தி நிறுவனங்களில் வேலை இன்மை அதிகரித்து வருகிறது.

கடந்த சில மாதங்களாக வாகன விற்பனை கடுமையாகச் சரிந்து வருகிறது.   இதன் காரணமாகப் பல வாகன முகவர்கள் தங்கள் விற்பனை நிலையங்களை மூடி உள்ளனர்.  அது மட்டுமின்றி வாகனங்கள் வாங்குவோர் இல்லாததால் பல வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளில் உற்பத்தியைக்  குறைத்துள்ளன.  மாருதி, டாட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் வேலை இன்மையை அறிவித்துள்ளன.

தமிழகத்தில் வாகன உற்பத்தியில் முன்னோடியாக நிலவுவது டிவிஎஸ் குழுமம் ஆகும்.   உலகெங்கும் டிவிஎஸ் வாகனங்களுக்கு நல்ல மதிப்பு உள்ளது.   இந்த வாகனங்கள் தென் இந்தியாவில் மட்டுமின்றி நாடெங்கும் நல்ல புகழ் பெற்றுள்ளன.    இந்த குழுமம் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியையும் நிகழ்த்தி வருகின்றன.   சென்னை பாடியில் இந்த  குழுமத்தின் லூகாஸ், பிரேக்ஸ் இந்தியா, டிவிஎஸ் ஃபாஸ்டனர்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் அமைந்துள்ளன.

இந்த குழுமத்தின் லூகாஸ் டிவிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தற்போது நிலவி வரும் வர்த்தக மந்தநிலை காரணமாக ஏற்கனவே ஒரு சில நாட்களை வேலையில்லா நாட்களாக அறிவித்திருந்தோம்.   மேற்கண்ட வர்த்தக நிலைமை தொடர்ந்து சீரடையாமல் உள்ளதால் இந்த மாதமும் நமது வேலை நாட்களை மீண்டும் குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் இந்த குழுமம் வாரத்தில் இரு நாட்களை வேலை இல்லா நாட்களாக அறிவித்துள்ளது.   இது பணியாளர்களிடையே மிகவும் கவலையை உண்டாக்கி இருக்கிறது.    ஏற்கனவே வாகன  உற்பத்தியாளர்கள் அரசிடம் விற்பனையை அதிகரிக்க ஜிஎஸ்டி விகிதத்தை குறைக்க விடுத்த கோரிக்கையை அரசு ஏற்காமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.