வீட்டிலிருந்தே வேலை… முதுகுத் தண்டுக்கு வைக்குது உலை…

Tired woman massaging neck, sitting uncomfortable on bed when working on laptop

இந்த ஊரடங்கினால் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டு விட ஒர்க் ஃப்ரம் ஹோம் (WFH) கலாச்சாரம் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகி விட்டது இப்போது.  இது புதுவிதமான உடல் உபாதைகள் சிலவற்றை நமக்குப் பரிசாகத் தந்து வருகிறது.

“இதுக்குனு வீட்ல தனியா டேபிள் சேர் ஏதுமில்ல.  பெட்ல உட்கார்ந்தே தான் 10 மணி நேரம் வரை  லேப்டாப்ல ஒர்க் பண்ணியாகணும்.  இது இப்போ உடம்பை ஒரு வழி ஆக்கிடிச்சி” என்கிறார் Amphenol எனும் தனியார் நிறுவன கொள்முதல் அதிகாரி தீபக்.  இவரைப்போலவே வீட்டிலிருந்து பணி செய்யும் பலருக்கும் சம்பளத்துடன் கிடைத்தது தோள்பட்டை வலி, முதுகு வலி மற்றும் கைவலி.

முதுகு தண்டுவட சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆனந்த், “சமீபமா இது மாதிரி கீழ் முதுகில் வலியோட வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிச்சிருக்கு.  அதிலும் பெண்கள் அதிகம்.  அவங்க ஆபீஸ் ஒர்க்கோட வீட்டு வேலையையும் சேர்த்து பண்றதால ஏற்படுகிற மன அழுத்தம் காரணமா குதிகால் வலியால் அதிகம் பாதிக்கப்பட்டு வராங்க.  இது மாதிரி கழுத்திலருந்து கீழ்முதுகு வரையான வலின்னா உடனே டாக்டர்ட்ட போய்டுங்க.  நீங்களா ஏதாவது மாத்திரைகளை வாங்கி சாப்டாதீங்க.  அது ரொம்ப ஆபத்து” என்று எச்சரிக்கிறார்.

“என்ன தான் ஆபீஸ் ஒர்க் என்றாலும், வீட்டிலேயே இருந்து செய்வதால் இதற்கென  தோதான டேபிள், சேர் இல்லாமல் நினைத்த இடங்களில் அமர்ந்து வேலை அதிக நேரம் செய்வதால் இது போன்ற பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.  வார விடுமுறையைக்கூட அனுபவிக்க முடியவில்லை.  அவ்வளவு முதுகு வலி” என்று வருந்துகிறார் விப்ரோவில் சீனியர் கன்சல்டன்ட்டாக இருக்கும் அர்விந்த் பாபு.

SIMS மருத்திவமனை ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் உதயசங்கர், “ஆபீஸ்ல இருக்கிற மாதிரி உயரமான சேர் இல்லாம வேலை செய்றதால கை விரல்கள், மணிக்கட்டு, தோள்பட்டை, முதுகு போன்றவைகளுக்கு வழக்கமான கம்போர்ட் கிடைப்பதில்லை.  அதனால நீங்க உட்கார்ந்து வேலை செய்யிற பொஷிசனை கரெக்ட் பண்ணிக்கோங்க.  தினமும் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்யுங்க.  வேலை நடுவில 40 நிமிசத்துக்கு ஒரு தடவை லேசான ஓய்வு அவசியம்.  எல்லாத்துக்கும் மேல, இனி WFH தவிர்க்க முடியாததா ஆகிட்டதால, சிரமம் பாக்காம வீட்லயே வசதியான டேபிள் சேர் வாங்கி போட்டுடுங்க” என்று அறிவுரை கூறுகிறார்.

கொரோனாவால எல்லாம் மாறிக்கொண்டே வரும் சூழலில், இனி வீட்டிலேயே அலுவலக வசதிகளை அமைத்துக்கொள்வதே நல்லதாகும்.

– லெட்சுமி பிரியா