சென்னை,

டந்த 2013ம் ஆண்டு தமிழகத்தை கலக்கி வந்த போலி சான்றிதழ் விவகாரத்தில், மேல் நடவடிக்கை எடுக்காமல் சென்னை மாநகராட்சியும், அரசும் தவிர்த்து வந்தது.

தற்போது மகாராஷ்டிரா அரசு தொடர்ந்த வழக்கின் காரணமாக, போலி படிப்பு சான்றிதழ் மூலம் அரசு பணியில் சேர்ந்திருப்பது தெரியவந்தால், அவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்யலாம் என்று அதிரடி தீர்ப்பு கூறியுள்ளது.

இந்த தீர்ப்பை தொடர்ந்து சென்னை மாநகராட்சி மற்றும் தமிழகம் முழுவதும் அரசு பணிகளில் போலி சான்றிதழ் மூலம் பணி ஆணை பெற்று, பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே  சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் போலி சான்றிதழ் மூலம் பணி நியமனம் பெற்று பணியில் தொடர்ந்து வருவதாக கடந்த 2013ம் ஆண்டு சர்ச்சை எழுந்தது.

அதைத்தொடர்ந்து சட்டிபிகேட் வெரிபிகேஷன் நடைபெற்றபோது, பணியில் இருக்கும் சில ஆசிரியர்கள் பயிற்சி பெற்றதாக கூறப்படும் பயிற்சி நிறுவனங்கள் தமிழகத்தில் இல்லை என்றும், சிலர் கொடுத்த சான்றிதழ்களில் பயிற்சி பெற்றோர் வெளி இடத்தில் பணிபுரிந்து வருவதும், பெயர் மாற்றம் செய்து மோசடி செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்தது..

அதையடுத்து அப்போதைய மாநகராட்சி கமிஷனர் விஜயகுமார் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். போலி சான்றிதழ் விவகாரம் தொடர்பாக சிலர் மீது நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து முழு விசாரணை நடைபெறுவதற்குள் அவர் மாற்றம் செய்யப்பட்டார்.

அதையடுத்து பணிக்கு வந்த மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர், போலி சான்றிதழ் தொடர்பாக, ஒன்பது பேர் மீது புகார் நிரூபிக்கப்பட்டு, அதில் எட்டு பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தார்.

ஆனால், அவர்கள் மீண்டும் பணியில் தொடர்வதாகவே கூறப்படுகிறது.

இந்நிலையில், மாநகராட்சி தேர்தல் முடிந்து  மேயராக பொறுப்பேற்ற சைதை துரைசாமி, மாநகராட்சி  ஆசிரியர்களின் சான்றிதழ்களை முழுமையாக  ஆய்வு செய்து, போலி ஆசிரியர்களை முழுமையாக களையெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதற்காக 2,000க்கும் மேற்பட்ட  ஆசிரியர்களின் சான்றிதழ் நகல்களை, மாநகராட்சி கல்வித் துறை பெற்று ஆய்வு நடத்தியது.

ஆனால், இந்த ஆய்வு வெறும் கண்துடைப்பு என்று அப்போது கூறப்பட்டது. அதேபோல்,  ஆய்வின் அடிப்படையில், தற்போது பணிபுரியும் ஆசிரியர்களில் யாரும் போலி சான்றிதழ் பெற்றவர்கள் இல்லை என்ற முடிவுக்கு மாநகராட்சி வந்துள்ளது என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், தற்போதும் 50க்கும் மேற்பட்டவர்கள்,  போலி சான்றிதழ் மூலம் ஆசிரியர்கள் பணியில் இருப்பதாக விவரம் அறிந்த மாநகராட்சி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்த போலி சான்றிதழ் ஆசிரியர்கள், தங்கள் பணியை காப்பாற்றிக் கொள்ள, கல்வித்துறையின் உயரதிகாரிகளுக்கு பணம் கொடுத்து சரிக்கட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

போலி சான்றிதழ் மூலம் பணியாற்றி வரும் ஆசிரியர்களில் ஒரு சிலர், ஆசிரியர் சங்கங்களில் முக்கிய பதவிகளில் இருப்பதாகவும், இதன் காரணமாக அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி கல்வி  அதிகாரிகள் தயங்குவதாகவும் கூறப்படுகிறது.

அதுபோல் போலி சான்றிதழ் விவகாரத்தில், பலர் வெளி மாவட்டங்களுக்கு பணி மாறுதல் பெற்று சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது,

போலி சான்றிதழ் மூலம் பணி நியமனம் பெற்றவர்கள் குறித்து விசாரணை செய்ய  ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நேர்மையான அதிகாரிகள் சான்றிதழ்களை சரிபார்த்தால் மட்டுமே இந்த விஷயத்தில் உண்மையான முகம் வெளியே தெரியும் என்றார்.

மேலும், வெளி மாவட்டங்களில், கிராம பகுதிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் பலர், தாங்கள் பணி செய்யாமல்,  தங்களுக்கு பதில் குறைந்த சம்பளத்தில், அந்த பகுதியை சேர்ந்த இளை ஞர்களை பணிக்கு அமர்த்தி மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார்கள். இதில் அரசு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுபோல, சென்னை மாநகராட்சி உள்பட பல பகுதிகளில்,  பல ஆசிரியர்கள்  ஒரே பள்ளியில் தொடர்ந்து  10 வருடங்களுக்கும் மேலாக  பணி புரிந்து வருவதாகவும், அவர்களை உடடினயாக வேறு பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என்றும்,

அதுபோல தற்போதைய பாடத்திட்டத்துக்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும்,  தகுதி பெறாத ஆசிரியர்களின் பதவி உயர்வு, பணப்படி உயர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

ஆனால், இதையெல்லாம் அரசு  செயல்படுத்த முன்வராது என்பதையும் தெரிவித்தார்.

தற்போது சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து மாநகராட்சியும், அரசும் இதுபோன்ற விசயங்களில் அதிரடி நடவடிக்கையை தொடங்கும் என்று எதிர்பார்போம்.

மேலும், நாடு முழுவதும் பல மாநிலங்களில் கல்வியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு, நீட் போன்ற தகுதி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன.

ஆனால், தமிழகத்தில் இப்போதுதான் அதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும்,  தமிழக மாணவர்கள் எதிர்காலத்தில் மற்ற மாநில மாணவர்களோடு போட்டிப்போட  வேண்டுமானால், நமது கல்வி கொள்கையிலும் மாற்றம் தேவை.

தற்போது தொடர்ந்து வரும் பிளஸ்2 படித்ததும்,  இடைநிலைக் கல்வி படிக்கும்  முறையையை ஒழித்துவிட்டு, குறைந்தது பட்டப்படிப்பு முடித்துவிட்டு, பிஎட் போன்ற தொழிற்கல்வி பயின்றவர்களை மட்டுமே பள்ளிகளுக்கு ஆசியர்களாய நியமனம் செய்ய வேண்டும் என்ற முடிவை அரசு எடுக்க வேண்டும்.

இதுபோல் அடிப்படை விசயங்களில் மாற்றம் செய்தால்  மட்டுமே தமிழக மாணவர்களின் நலன் காக்கப்படும்.