Random image

வைகோவுக்கு துரைமுருகன் வழங்கிய அறிவுரை 

வைகோ இனம் பார்த்து பழக வேண்டும். களம் பார்த்து கால் வைக்க வேண்டும் என  ஈரோட்டில் நடைபெற்ற மதிமுக மாநாட்டில் திமுக பொருளாளர் துரைமுருகன் பேசினார்.

ஈரோட்டில் நடந்த மதிமுக முப்பெரும்விழா மாநில மாநாட்டில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி படத்தை   திமுக பொருளாளர் துரைமுருகன் திறந்துவைத்தார். பிறகு அவர்  பேசியதாவது:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சில பல காரணங்களால் இந்த விழாவில் கலந்துகொள்ள முடியாத நிலை. அவர் அவர் சார்பில் நான் கலந்துகொண்டிருக்கிறேன். இந்த விழாவில் கருணாநிதி படத்தைத் திறந்து வைத்து, எனது 50 ஆண்டுகால நண்பர் வைகோவின் பெருமைகளை குறிப்பிட்டு வாழ்த்துவதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. நானும் வைகோவும் கருணாநிதியால் வளர்க்கப்பட்ட, உருவாக்கப்பட்டவர்கள். அடையாளம் பெற்றவர்கள்.  நாங்கள் எவ்வளவு உயரம் பறந்தாலும், கருணாநிதி என்ற சக்தி இதயத்தில் இருப்பதால், அரசியலில் நாங்கள் நிலைத்து நிற்க முடிகிறது. கருணாநிதி இருந்தபோது அவரது பெருமையைப் பாராட்டாதவர்கள், மாற்றுக்கருத்து கொண்டவர்கள் அவரது மறைவிற்குப் பிறகு தற்போது அவரைப் பாராட்டுகின்றனர்.

வைகோவும் நானும் சட்டக்கல்லூரியில் ஒன்றாகப் படித்தோம். இருவரும் நெருக்கமான நண்பர்கள். அரசியல்ரீதியாக எங்களிடையே கொஞ்ச காலம் ஊடல் இருந்தது. ஆனால்  எங்கள் நட்பில் எந்த ஊடலும் எப்போதும் இல்லை.  அரசியலில் கருத்து வேறுபாடு இருந்த காலத்தில் நான் அவரை வெளுத்து வாங்கி இருக்கிறேன். ஆனால், என் நண்பன் வைகோ ஒருநாளும் என்னை ஒரு சொல் சொன்னது இல்லை.  இறப்பு வரை எங்கள் நட்பு தொடரும்.

வைகோ எப்போதும் படபடப்பாக பேசுவார். அஸ்வமேத யாக குதிரை என்று தன்னை நினைத்துக் கொள்வார். ஆனால், என்னிடம் பேசும்போது இதமான மழைச்சாரல் போல் இருப்பார். திமுகவில் தனது கட்சிப்பணியால், தென்பாண்டி மண்டலத்தில் மகா மண்டலேஸ்வரர் என்ற பட்டத்தை கருணாநிதியிடம் இருந்து பெற்றவர் வைகோ. தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை, வைகோ ஏதாவது சொன்னால், அதனை கருணாநிதி தட்டமாட்டார். கருணாநிதியை தன் உயிரை விட அதிகம் நேசித்தவர். கருணாநிதியின் உயிர்காக்கும் வேளக்காரப்படைக்கு தலைவராக இருந்தவர் வைகோ.

கடந்த ஐம்பது வருடங்களில் அரசியல், இலக்கியம், இலங்கை விவகாரம், மாநிலங்களவை என்று எல்லா களங்களிலும் வைகோ ஏற்படுத்திய அதிர்வு மிக அதிகம்.  வைகோவைப் பொறுத்தவரை ஒன்று நடைபயணம் போவார்; இல்லாவிட்டால் சிறைக்குப் போவார்.

எனது நண்பர் வைகோ கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் எரிமலை மீது நடந்ததே அதிகம். அடுத்த அரை நூற்றாண்டு வெற்று நூற்றாண்டு ஆகி விடக்கூடாது. ஆகவே இனிமேல் வைகோ இனம் பார்த்து பழக வேண்டும். களம் பார்த்து கால் வைக்க வேண்டும்.

தமிழகத்தில் 5000 கிலோ மீட்டர் தூரம் வைகோ நடைபயணம் சென்றிருக்கிறார்.  அந்த நடைபயணம் வீணாகாது. வைகோவின் பாதம் பட்ட இடங்கள் எல்லாம், விதையாக விழுந்துள்ளது.  அவை நாளை மரமாக மலரும். தியாகம் என்றும் வீண் போகாது; நிலைத்து நிற்கும்.

அரசியலில் பிரிவுகள் சில நேரம் தவிர்க்க முடியாதது. பிளவுகள் வரலாம்; கொள்கையில் முரண்பாடு வரலாம். ஆனால் நேர் எதிர்ப்பாக சென்றுவிடக்கூடாது. திமுகவில் இருந்து வைகோ பிரிந்தது ஒரு சிணுங்கல்; ஒரு ஊடல். நீர் அடித்து நீர் விலகாது என்பதால் இப்போதும் இருவரும் மேடையில் இருக்கிறோம். அரசியலில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தியாகம் புரிந்தவர் வைகோ” என்று துரைமுருகன் பேசினார்.