அ.தி.மு.க செய்தித்தொடர்பாளரா ராமதாஸ்?: துரைமுருகன் கண்டனம்

அ.தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளரா ராமதாஸ் என்று தி.மு.க.வின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து  இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

”கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களில் பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலம் அமைக்க அரசு ஆணை வெளியிட்டது, தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குதிரை பேர அ.தி.மு.க அரசுதான்.

ஆனால், என்ன காரணத்தினாலோ பா.ம.க நிறுவனர் தலைவர் ராமதாசும், அவரது பிள்ளை அன்புமணியும் தி.மு.க.வின் மீது பாய்ந்து பிராண்டுவதையே கலையாகக் கடைப்பிடித்து வருகிறார்கள். ஆறு  ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கும் அதிமுகவை, இருவரையுமே கைது செய்து சிறையில் அடைத்த அதிமுக ஆட்சியை விமர்சிப்பதை விட, சமூக நீதியை பாட்டாளி மக்களுக்கு வழங்கிய திமுக-வை விமர்சிப்பதில் ஆர்வம் காட்டி, அதிமுகவின் செய்தித்தொடர்பாளர்களாகவே மாறி வருவது வேதனை அளிக்கிறது.

ஆளும் அதிமுக அரசின் மீது தி.மு.க. குற்றம் சாட்டினால், அதற்கு பதில்   தைலாபுரம் தோட்டத்திலிருந்தோ அல்லது அவரது தனயன் அன்புமணியிடமிருந்தோதான் பதில் வருகிறது. இவர்களுக்கும் அதிமுகவுக்கும் அப்படியென்ன ரகசிய உறவு என்ற கேள்வி பாட்டாளி சொந்தங்களுக்கே ஏற்பட்டு, இப்போது பா.ம.க.வில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். தன் கட்சியிலிருந்து சாரை சாரையாக வெளியேறுபவர்களை தக்கவைத்துக்கொள்ள எங்கள் தலைவர், செயல் தலைவர் ஆகியோரையும், திமுகவையும் விமர்சித்தால்தான் முடியும் என்று ராமதாஸ் நினைக்கிறார் போலும்.

ஆகவேதான் முதலமைச்சரோ, அதிமுக அமைச்சர்களோ குற்றச்சாட்டுக்குப் பதில்சொல்லும்முன்பு தி.மு.க.வை விமர்சித்து, ஆளும் ஊழல் அதிமுக மீது மக்கள் கோபித்துக்கொண்டு விடக்கூடாது என்பதில் ராமதாஸ் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்” என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.