சட்டமன்றத்தின் சூப்பர் ஸ்டார் துரைமுருகன்; போர்வாள் டி.ஆர்.பாலு: ஸ்டாலின் புகழாரம்

சென்னை:
திமுக பொதுச் செயலாளராக பதவியேற்றுள்ள துரைமுருகன் சட்டமன்றத்தின் சூப்பர்ஸ்டார் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் புகழாரம் சூடியுள்ளார்.

கொரோனா பொது முடக்கத்தால் ஒத்தி வைக்கப்பட்ட திமுக பொதுக்குழு கூட்டம் காணொளி வாயிலாக இன்று நடைபெற்றது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்பட சிலர் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அது தவிர, தமிழகம் முழுவதும் 3500க்கும் மேற்பட்டோர் காணொளி காட்சி மூலம் கலந்து கொண்டனர்.

மறைந்த திமுக நிர்வாகிகள் 140 பேருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம். புதிய கல்வி கொள்கைக்கு கண்டனம். கொரோனா விவகாரத்தில் தமிழக அரசுக்கு கண்டனம். திமுக தலைவர் முதல்வராக 2021ஆம் ஆண்டில் ஆட்சி அமைத்திட சூளுரை உட்பட மொத்தம் 12 தீர்மானம் திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழுவின் முக்கிய அம்சமான பொதுச்செயலாளாராக துரைமுருகனும், பொருளாராக டி.ஆர்.பாலுவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, ஆ.ராசா ஆகியோர் துணை பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். இதனை அதிகாரப்பூர்வமாக கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.

தொடர்ந்து ஸ்டாலின் பேசுகையில், துரைமுருகனும், டி.ஆர்.பாலுவும் திடீரென உயரத்தை எட்டவில்லை. பல்வேறு பதவிகளை வகித்து மக்கள் தொண்டாற்றியவர்

துரைமுருகன். 50 ஆண்டுகளாக திமுகவில் ஒளி பாய்ச்சி வருபவர் துரைமுருகன். அதேபோல், 17 வயதில் திமுகவில் சேர்ந்த டி.ஆர்.பாலு திமுகவுக்கு கிடைத்த போர் வாள். மக்களவை, மாநிலங்களவை உறுப்பினராக இருந்து, 3 முறை அமைச்சராக இருந்தவர் என்றார்.

அண்ணா வகித்த பொதுச்செயலாளர் பதவியை துரைமுருகன் ஏற்றுள்ளார் என்று சுட்டிக்காட்டிய ஸ்டாலின், 9 முறை சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட சூப்பர் ஸ்டார் துரைமுருகன் என்றும் புகழாரம் சூடினார். கருணாநிதிக்கு கார் ஓட்டிய காரணத்திற்காக கைது செய்யப்பட்டவர் டி.ஆர்.பாலு என்றும், கருணாநிதிக்காக உயிரை கொடுக்க கூட தயாராக இருந்தவர் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

கருணாநிதியை நினைவு கூர்ந்து பொதுக்குழுவில் உருக்கமாக பேசிய ஸ்டாலின், 8 மாதத்தில் திமுக ஆட்சிக்கு வரும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.