வேலூர்:
மிழகம் வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அரசு விழா மேடையை அரசியல் மேடையாக மாற்றியுள்ளார் என்று திமுக பொதுச்செயலர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியது:
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்துக்கு வருகைபுரிந்து அதிமுக உடனான கூட்டணி குறித்து பேசியது, அரசு விழாவில் கலந்து கொண்டதில் திமுகவுக்கு எந்தவித மாற்று கருத்தும் கிடையாது.  ஆனால், அரசு விழா மேடையையே அரசியல் மேடையாக மாற்றி எதிர்க்கட்சியினரை வசைபாடி சென்றுள்ளார். இது ஜனநாயக நெறிமுறையை அழிக்கும் செயலாகும்.  அரசுக்கும், அரசியலுக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்றால் ஜனநாயகம் மடிந்து சர்வதிகாரம்தான் தலைதூக்கும். பழைய நெறிமுறைகளை மாற்றிவிட்டு மத்திய, மாநில அரசுகள் அவ்வாறு நடப்பதை திமுக பொதுச்செயலர் என்ற முறையில் வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழகம் சிறந்து விளங்குவதாக அமித்ஷா கூறியுள்ளார். அவர் நற்சான்று வழங்கியதை எண்ணி மக்கள் சிரிக்கின்றனர். தமிழகத்திலேயே இப்படி என்றால் மற்ற மாநிலங்கள் எப்படி இருக்கும் என்ற கேள்வியும் எழுகிறது. 10 ஆண்டு கால காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை பட்டியலிட தயாரா என அமித்ஷா கேட்கிறார். தமிழகம் பல்வேறு புயல்களால் பாதிக்கப்பட்டது. அவற்றுக்கு மத்திய பாஜக அரசு எவ்வளவு நிதியுதவி செய்துள்ளனர் என்ற பட்டியலை வெளியிட வேண்டும். அதன்பிறகு காங்கிரஸ் திமுக கூட்டணி செய்த சாதனைகளை கூறுகிறோம்.
2ஜி குறித்து பேசுவதற்கு முன் அமித்ஷா நாளிதழ்களை படிக்க வேண்டும். அது தீர்ப்பு அளிக்கப்பட்ட ஒன்றாகும். தவிர, திமுகவை மிரட்டுவது போன்று அமித்ஷா பேசியுள்ளார். திமுக தனது இளம் பிராயத்தில் இருந்த போதே பல தலைவர்களை சந்தித்துள்ளது. திமுக லட்சியங்கள் உண்டு. ஆனால், திமுகவை கிள்ளுக் கீரையாக கருதினால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.
கருணாநிதி இல்லை அவர் பெற்ற மகன் தானே என நினைக்கிறார்கள். ராஜராஜ சோழனை விட ராஜேந்திர சோழன்தான் கடாரம் வரை வென்றார். அதேபோல், கருணாநிதியைவிட 8 மடங்கு வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் தலைவராக ஸ்டாலின் இருக்கிறார்.
வாரிசு அரசியல் குறித்து அமித்ஷா பேசும் முன்பு எந்த ஊரில் வாரிசு அரசியல் இல்லை என்பதை சிந்திக்க வேண்டும். இத்தகைய பேச்சை அமித்ஷா பிகாரில் பேச வேண்டும். மேலும், வாரிசு அரசியலாக ஓபிஎஸ், ஜெயக்குமார் ஆகியோர் மகன்கள் எம்.பி.யாக இல்லையா என்பதை கூற வேண்டும். 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொண்டுவரப்பட்டுள்ள தபால் வாக்கு முறையை எதிர்த்து திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றார் துரைமுருகன்.