டில்லி

தேர்தல் பத்திர விவரங்களை ரிசர்வ் வங்கியுடன் பகிரப்பட்டது ஏன் என நிதிச்செயலர் சுபாஷ் கர்க்  கடந்த 2017 ல் வினா எழுப்பி உள்ளார்.

தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக அதிக அளவில் நிதி பெற்றதாகத் தகவல்கள் வந்ததில் இருந்தே சர்ச்சைகள் ஒன்றன்பின் ஒன்றாக எழுந்த வண்ணம் உள்ளது.   குறிப்பாக பாஜக அரசு இந்த விவகாரம் குறித்த திட்ட அறிக்கை தயாரிப்பதில் எந்த ஒரு அமைப்பையும் சேர்க்க விரும்பவில்லை எனக் குற்றம் சாட்டப்படுகிறது.   தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கிடைத்த தகவல்களின்படி இது குறித்த ப்ல நிகழ்வுகள் தெரிய வந்துள்ளன.

இந்த திட்டம் குறித்த வரைவு அறிக்கை தயாராகும் முன்பே பாஜக இது குறித்து அறிந்திருந்ததாகவும் அதனால் மற்ற கட்சிகளுக்கு இந்த விவரங்கள் பின்பு தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது.   அத்துடன் இது குறித்த விவரங்களைத் திட்ட வரைவு அறிக்கை தயாராகும் முன்பு ரிசர்வ் வங்கிக்கு அனுப்பியதை அரசு விரும்பவில்லை என தற்போது தெரிய வந்துள்ளது.

அப்போதைய நிதிச் செயலரான சுபாஷ்கர்க் இந்த கோப்பில் தனது கைப்பட 2017 ஆம் தேதி ஒரு குறிப்பு எழுதியுள்ளார்.  அதில் அவர்,”நான் இந்த கோப்பை யாரும் கேட்டால் மட்டுமே அளிக்க வேண்டும், இல்லையெனில் அளிக்கக் கூடாது என சிறப்பு எச்சரிக்கை விடுத்துள்ள போதிலும் ஏன் ரிசர்வ் வங்கிக்கு அவர்கள் கேட்காமலே அனுப்பப்பட்டது?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதற்கு நிதிநிலை அறிக்கை பிரிவு இணைச்செயலர் பிரசாந்த் கோயல், “ஏற்கனவே இதே முறை பிரதமரின் கரிப் கல்யாண் முதலீடு திட்டத்தில் பின்பற்றப்பட்டது.  நாங்கள் இந்த வரைவு அறிக்கையை ரிசர்வ் வங்கி மூலம் கிடைத்த தகவல் மற்றும் தொலைப் பேசி மூலம் கிடைத்த விளக்கங்களைக் கொண்டு உருவாக்கினோம்.  அதனால் அதை அனுப்பி வைத்தோம்” என அதே மாதம் 7 ஆம் தேதி பதில் அளித்துள்ளார்.

தற்போது வெளிநாட்டில் உள்ள கர்க் இடம் செய்தியாளர்கள் தொடர்பு கொண்டு இது குறித்துக் கேட்டதற்கு அவர் தாம் கோப்பில் எழுதியதை மறுக்கவில்லை.  மாறாக, “இதில் மேலும் பல ஆழமான விவகாரங்கள் உள்ளன.  நான் இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் அங்கு வந்து விடுவேன்.  பிறகு அதைக் குறித்து விவாதிப்போம்” எனப்  பதில் அளித்துள்ளார்.