பாட்னா

பீகார் முன்னாள் முதல்வர் ஜகன்னாத் மிஸ்ரா இறுதி மரியாதையின் போது சுடப்பட்ட துப்பாக்கி குண்டுகள் வெடிக்காமல் இருந்துள்ளன

முன்னாள் பீகார் முதல்வர் ஜகன்னாத் மிஸ்ரா மறைவையொட்டி அரசு சார்பில் அவருக்கு மரியாதை அளிக்க உத்தரவிடப்பட்டது.  இவ்வாறு மரியாதை அளிக்கப்பட்டவர்கள் உடல் எரியூட்டும் போது துப்பாக்கி  குண்டுகள் முழங்க தகனம் செய்யப்படுவது வழக்கமாகும்.

மிஸ்ராவின் உடல் சுபால் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் நேற்று தகனம் செய்யப்பட்டது.   இந்த எரியூட்டலுக்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும்  பல அமைச்சர்களும் அதிகாரிகளும்  கலந்துக் கொண்டனர்.  அப்போது அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக வானத்தை நோக்கி சுட்டனர்.

அப்போது அந்த துப்பாக்கிகளில் இருந்த குண்டுகள் வெடிக்கவில்லை.  இது  மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.  இதை ஒட்டி ஒரு மூத்த அதிகாரி வந்து துப்பாக்கி விசையை அழுத்திப் பரிசோதித்தார்.  ஆனால் அதில் பயன் இல்லாததால் அவர் அங்கிருந்து விலகினார்.

இது குறித்து மற்றொரு மூத்த அதிகாரி, “இது தீவிரமான குறை ஆகும்,  அதிகாரிகள் இந்த நேரத்தில் துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளை முன் கூட்டியே சோதனை இட்டிருக்க வேண்டும்.  இது குறித்து  அரசு சுபால் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளது” என தெரிவித்தார்.