மோதல் நேரத்தில் மோடியை சீனா புகழ்வது ஏன்? ராகுல் காந்தி கேள்வி

டில்லி

ற்போது இந்தியாவுடன் மோதல் உள்ள வேளையில் சீனா என பிரதமர் மோடியைப் புகழ்கிறது எனக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேட்டுள்ளார்.

சென்ற வாரம் திங்கள் அன்று சீனப்படைகள் இந்திய ராணுவத்தின் மீது திடீர் தாக்குதல் நடத்தியதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டு சுமார் 72 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.   இதையொட்டி நாடெங்கும் சீனா மீது கடும் எதிர்ப்பு அலை வீசி வருகிறது.   சீனாவுடனான வர்த்தக உறவுகளை முடித்துக் கொள்ள வேண்டும் எனவும் சீனப்பொருட்களை புறக்கணிக்க வேண்டும் எனவும் மக்களில் பலர் குரல் எழுப்பி உள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில் அவர். :நமது எல்லையில் யாரும் ஊடுருவியது இல்லை.  இப்போதும் யாரும் ஊடுருவவில்லை.  நமக்குச் சொந்தமான நிலப்பகுதியை  யாரும் கைப்பற்றவும் இல்லை” எனக் கூறியதாகச் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டு இருந்தது.

மேலும் இந்த செய்தியில் பிரதமர் மோடியின் இந்த அறிக்கை இந்தியா மற்றும் சீனா இடையிலான மோதலைக் குறைக்கும் எனவும் கூறப்பட்டிருந்தது.   அத்துடன் சீனாவின் பேராசிரியரான லின் மின்வாங் என்பவர் சீனாவின் மீது குற்றம் சாட்டப் பிரதமர் மோடி விரும்பவில்லை எனவும், பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் நடந்த மோதலின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைச் சீனாவின்மீது எடுக்கவில்லை எனப் புகழ்ந்ததாகவும் சொல்லப்பட்டிருந்தது.

இந்த செய்தி இந்தியாவில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தனது டிவிட்டரில்,

“சீனா நமது ராணுவ வீரர்களைக் கொன்றுள்ளது.

சீன நமது நிலத்தைக் கைப்பற்றியுள்ளது.

அப்படி இருக்க இந்த மோதலில் சீனா ஏன் மோடியைப் புகழ்கிறது?”

எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.