சென்னை

ரடங்கு நேரத்தில் பள்ளிக் குழந்தைகளுக்குத் தினமும் முட்டை வழங்குவது சாத்தியம் இல்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   இதனால் கடந்த மார்ச் மாதம் இடையில் பள்ளிகள் மூடப்பட்டன.  கொரோனா தொற்று முடிவுக்கு வராததால் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன.  தமிழகத்தில் பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவுடன் தினசரி ஒரு முட்டை வழங்கப்படுகிறது.

தற்போது ஊரடங்கு காரணமாகத் தமிழகம் முழுவதும் பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு அளிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. எனவே குழந்தைகளுக்குச் சத்துணவு மையங்கள் மூலம் முட்டையுடன் கூடிய உணவு வழங்க வேண்டும் என ஒரு பொது நல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா ஆகியோரின் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த அமர்வில் தமிழக அரசு சார்பில் சமூக நலத்துறை செயலாளர் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்கள் மூலமாக 23,71,31 ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு  மாணவர்கள் மற்றும் 18,59,808 ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள்  பயனடைந்து வருகின்றனர்.  கொரோனா அச்சம் காரணமாக தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது.  இந்நிலையில் இவர்களைப் பள்ளிக்கு வரவழைத்து முட்டைகள் வழங்குவது சாத்தியம் இல்லை.  அது அபாயகரமானதாகும்.

எனவே ரேஷன் கடைகள் மூலம் இவர்களுக்குக் கூடுதல் பருப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   இவர்களுக்கு 16,138,69 டன்கள் அரிசியும் 5,207.84 டன்கள் பருப்பும் வழங்கப்படுகிறது.   இதைத் தவிரக் குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு அங்கன்வாடி பணியாளர்கள் நேரடியாக உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வியாழக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.