தென்தாமரைக்குளம்

ரடங்கு உத்தரவை மீறி பாரத மாதா சிலை திறந்த கன்னியாகுமரி மாவட்ட பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில்  தென்தாமரைக்குளம் அருகே உள்ள கட்டுவிளை பகுதியில் கடந்த ஒரு வாரம் முன்பு ஐந்தடி உயர பாரதமாதா சிலை அமைக்கப்பட்டது.  இந்த சிலை காவல்துறை அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ளதால் பிரச்சினைகளைத் தவிர்க்க காவல்துறையினர் சிலையை அகற்ற முடிவு செய்து அந்த சிலையைத் துணையால் மூடி வைத்தனர்

இந்த தகவல் அறிந்த சுமார் 50 பாஜகவினர் ஊரடங்கை மூடி சிலை அமைக்கப்பட்ட இடத்தில் கூடினார்கள்.  மூடப்பட்டிருந்த சிலையைத் திறந்து மாலை அணிவித்தனர்.   இதையொட்டி கன்னியாகுமரி காவல்துறை டி எஸ் இ பாஸ்கரன் தலைமையில் அங்கு வந்த காவல்துறையினர் சிலையை மீண்டும் மூட நடவடிக்கை எடுத்தனர்.   இதனால் அங்கு பாஜகவினருக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த சிலை முன் அனுமதி இன்றி வைக்கப்பட்டதால் பிரச்சினையை தவிர்க்கச் சிலையை மூடுவதாக காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.  அதை ஏற்காத பாஜகவினர் மீண்டும் சிலையைத் திறக்க முயன்றதை காவல்துறையினர் தடுத்துள்ளனர்.    பாஜகவினர் அங்குச் சாலை மறியலில் ஈடுபட்டதால் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

தகவல் அறிந்த நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி பாஜகவினர் ஆங்காங்கே சுமார் 15 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.   இப்போது சாலைகளில் வாகனம் செல்லாததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை.   சாலை மறியலில் ஈடுபட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  ஊரடங்கு வேளையில் பாஜகவினர் நடத்திய போராட்டம் இந்த பகுதியில் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.