அக்டோபரில் இரு மடங்கான சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் எண்ணிக்கை

சென்னை

சென்ற மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதற்கு முந்தைய மாதத்தை விட இரு மடங்காகி உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 25 முதல் நாடெங்கும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.  அதையொட்டி சென்னை மெட்ரோ ரயில் சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டது.   அதன் பிறகு ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

ஆறு மாதங்களுக்கு பிறகு செப்டம்பர் 7 ஆம் தேதி மாதம் மீண்டும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது.  மெட்ரோ ரயில் அதிகாரிகள் பயணிகள் முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தினர்.   கடந்த இரு மாதங்களில் மொத்தம் 10,63,416 பேர் பயணம் செய்துள்ளனர்.

இதில் செப்டம்பர் மாதம் மொத்தம் 3,60,193 பேர் பயணம் செய்துள்ளனர்.  அக்டோபர் மாதம் அது அதிகரித்து மொத்தம் 7,03,223 பேர் பயணம் செய்துளனர். அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி மட்டும் 30,515 பேர் பயணம் செய்துள்ளனர்.  20% கழிவு அளிக்கும் கியூஆர் கோட் வசதியை 19,607 பேரும், 10% கழிவு அளிக்கும் டிராவல் கார்ட் வசதியை 4,34,289 பேரும் பயன்படுத்தி உள்ளனர்.