டில்லி

காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்காலத்தில் 727 ஹெக்டேர் வனப்பகுதி நிலம் ராணுவத்தினருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலம் இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசம் என்பது யாவரும் அறிந்ததே.   இங்குள்ள வனப்பகுதி இந்த மாநிலத்துக்கு மேலும் அழகூட்டி வருவதாகும்.   இந்த வனப்பகுதிகள் அழகை மட்டுமின்றி மக்களின் வாழ்வாதாரத்துக்கும் உதவி வருகிறது    காஷ்மீர் மாநிலத்தில் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சாது ஷேக் உல் அலாம், “வனப்பகுதி உள்ளவரை இங்கு உணவுக்குப் பஞ்சமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

ஷேக் உல் அலாமின் இந்த வாசகம் பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்கள் ஆகியவற்றில் வனப்பகுதியைக் காக்கும் நோக்கில் பொறிக்கப்பட்டுள்ளன.   இதுவரை ஆட்சி செய்த அனைத்து அரசுகளும் இங்குள்ள வனப்பகுதிகளைக் காப்பதில் தீவிரமாக இருந்துள்ளன.   கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மெகபூபா முக்தி அரசுக்கு பாஜக அளித்த ஆதரவை விலக்கிக் கொண்டது.   அது முதல் இங்குக் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது.

தற்போது காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதால் கடும் பாதுகாப்பு நடவடிக்கையின் கீழ் மாநிலம் உள்ளது.   இந்தப் பணிகளுக்காக ராணுவ மற்றும் துணை ராணுவப்படை வீரர்கள் ஆயிரக்கணக்கில்  பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.   அவர்களுக்குப் போக்குவரத்து மற்றும் தங்குமிடம் அமைக்க நிலங்கள் தேவைப்படுகின்றன.

இதையொட்டி வனத்துறை ஆலோசனைக் குழு கடந்த செப்டம்பர் 18, அக்டோபர் 3, 17 மற்றும் 21 தேதிகளில் நடத்திய கூட்டத்தில் 198 திட்டங்களுக்காக ராணுவத்துக்கு 727 ஹெக்டேர் வனப்பகுதி நிலங்களை அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.   இதில் 60% அளவு நிலங்கள் சாலை அமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கும் 33% அதாவது 243 ஹெக்டேர் நிலங்கள் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தினர் தங்குமிடம் அமைக்கவும் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த 243 ஹெக்டேர் நிலத்தில் குல்மார்க் வனவிலங்குகள் காப்பகம், கேமில், ஜீலம்  பள்ளத்தாக்கு, சபா மற்றும் ஜம்மு வனப்பகுதிகள் உள்ளன.   இந்த நிலத்தில் மொத்தம் 1847 மரங்கள் அமைந்துள்ளன.  இவற்றை ராணுவம் வெட்டி வீழ்த்த உள்ளது.   ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் அமல்படுத்தப் பட்டுள்ளதால் வனத்துறை ஆலோசனைக் குழு கலைக்கப்பட்டு விட்டது.  எனவே அதற்கு முன்பு இந்த முடிவு அவசரமாக எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது,