சென்னை

ஜெட் ஏர்வேஸ் நிறுவன சேவை நிறுத்தம் மற்றும் போயிங் 737 விமானம் பறக்க தடை ஆகிய காரணங்களால் இந்த கோடையில் விமான சேவை குறைய வாய்ப்பு உள்ளது.

இந்தியாவில் உள்நாட்டு விமான சேவையை பெருமளவில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நடத்தி வந்தது. தற்போது நிதி நெருக்கடி காரணமாக அந்த நிறுவனத்தால் ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்கவும் தினசரி நிர்வாக செலவுகளை கவனிக்கவும் பணம் இல்லாத நிலை ஏற்பட்டது. அதனால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது அனைத்து சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்திக் கொண்டுள்ளது

அடுத்ததாக உள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பெருமளவில் போயிங் 737 விமானம் மூலம் தனது சேவைகளை நிகழ்த்தி வந்தது. இந்த ரக விமானம் தொடர்ந்து விபத்துக்குள்ளானதால் இவைகளுக்கு உலக நாடுகள் அனைத்தும் பறக்க தடை விதித்துள்ளன. அதனால் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் தனது கூட்டமில்லா சேவைகளில் பலவற்றை குறைத்து விட்டது.

தற்போது சென்னையில் இருந்து மும்பை, டில்லி, பெங்களுரு போன்ற நகரங்களுக்கு அதிகமாக சென்றுக் கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் அடியோடு நின்று விட்டன. வார இறுதியில் சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகள் எண்ணிக்கை அதிகமாக காணப்படும். தற்போது கோடை விடுமுறை என்பதால் வாரத்தின் அனைத்து நாட்களிலும் பயணிகள் அதிகரித்து வருகின்றனர்.

ஆனால் விமான சேவைகள் 500லிருந்து 430 ஆக குறைந்துள்ள நிலையில் அது மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் விமானக் கட்டணங்களும் விமான சேவை குறைவால் அதிகரிக்க தொடங்கி உள்ளன. கட்டணங்கள் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால் விமானப் பயணிகள் பலர் தங்கள் பயண திட்டத்தை மறு பரீசீலனை செய்து வருகின்றனர்.