டில்லி யுனிவர்சிட்டி மாணவர் தலைவர் பசோயா திருவள்ளுவர் பல்கலையில் படிக்கவில்லை: தமிழக உயர் கல்வித்துறை

டில்லி:

டில்லி யுனிவர்சிட்டி தேர்தலில் வெற்றிபெற்ற ஏபிவிபி மாணவர் தலைவர் அன்கிவ் பசோயா திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை என்று மாநில உயர்கல்வித் துறை தெரிவித்து உள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதி டில்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல் நடைபெற்றது. இந்த மாணவர் சங்க தேர்தலில் ஏபிவிபி மாணவர் தலைவர் அன்கிவ் பசோயா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இவர் தற்போது டில்லி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. புத்திஸ்ட் பாடப்பிரிவு எடுத்து படித்து வருகிறார். அவர் தனது பட்டய படிப்பை, தமிழகத்தில் வேலூரில் உள்ள  திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்துள்ளதாக கூறப்பட்டது.

அவர் டில்லி பல்கலைக்கழகத்தில் தாக்கல் செய்த சான்றிதழ்கள் போலி என கூறப்பட்டது. இதுகுறித்து, டில்லி பல்கலைக்கழகம் சார்பில் தமிழகத்தின் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்கு சான்றிதழ் களை அனுப்பி உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தின் வேலூரில் உள்ள  திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில், அன்கிவ் பசோயா என்ற பெயரில் யாரும் படிக்கவில்லை என்றும், சான்றிதழ்களில் குறிப்பிட்டுள்ள சீரியல் எண்கள் தங்கள் பதிவுகளில் இல்லை என்று திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து கூறிய,  மாநில உயர் கல்வித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர், டில்லி பல்கலைக்கழகம் பசோயா சமர்ப்பித்த சான்றிதழ்களை தங்களுக்கு அனுப்பியதாகவும், அவைகள் போலி என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

ஆன்கிவ் பைசோயா, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திலோ அல்லது அதனுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளோ அவர் படிக்கவில்லை என்றும், அவர் தயாரித்துள்ள சான்றிதழ்  உண்மையானதல்ல என்று உறுதிப்படுத்தி கடிதம்  எழுதப்பட்டிருப்பதாக தெரிவித்து உள்ளார்.

இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.