சட்ட விரோத பார்கள் : புலனாய்வுத் துறை பல இடங்களில் தீவிர சோதனை

சென்னை

ட்டவிரோத பார்கள் குறித்து புலனாய்வுத்துறை இயக்குநரக அதிகாரிகள் பல இடங்களில் தீவிர சோதனை நடத்தி உள்ளனர்.

நெல்லை மாவட்டத்தைச் சேர்4ந்த நெல்லையப்பன் என்னும் 37 வயது இளைஞர் திருப்போரூரில் வசித்து வந்தார்.  இவர் டாஸ்மாக் பார்களை ஒப்பந்தம் எடுத்து நடத்தி வந்தார்.   இவ்வாறு பார்களை நடத்த ஒரு அதிமுக பிரமுகர் மற்றும் காவல்துறையினருக்கு லட்சக்கணக்கில் லஞ்சம் அளித்துள்ளார்.    அதனால் ரூ.60 லட்சம் கந்து வட்டிக் கடன் வாங்கியதால் அவருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அதையொட்டி அவர் அளித்த புகாரை காவல்துறையினர் ஏற்கவில்லை என கூறப்படுகிறது.   இதனால் மாமல்லபுரம் காவல் நிலையத்தில் அவர் தன் மேல் பெட்றோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.  மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.   அவர் தாம் யார் யாருக்கு எவ்வளவு லஞ்சம் அளித்தோம் என்பதற்கான கணக்கை சமூக வலை தளங்களில் வெளியிட்டிருந்தார்.

இந்த தற்கொலைக்கு பிறகு புலனாய்வுத் துறை இயக்குநரக அதிகாரிகள், லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ஆகியோர் நேற்று முன் தினம் தீவிர சோதனை நடத்தி உள்ளனர்.  அவர்கள் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள், டாஸ்மாக் அதிகாரிகள் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சோதனையில் பல வைப்பு நீதி ரசீதுகள், தங்க ஆபரணங்கள், சட்டவிரோத பார்கள் நடக்குமிடம், அதன் உரிமையாளர்கள், தொலைபேசி எண் மற்றும் அவர்கள் அளித்த லஞ்சத் தொகை விவரங்கள் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.   இதைத் தவிர இந்த பார்கள் குறித்த விவரங்கள் அடங்கிய பல மெமரி டிவைஸ்களும் சிக்கி உள்ளன.

இது குறித்து அதிகாரி ஒருவர், “காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 106 மதுபான கடைகள் உள்ளன.  அவற்றில் 5 கடைகளுக்கு மட்டுமே பார் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.   ஆனால் செங்கல்பட்டு நகரில் மட்டும் 12 பார்கள் இயங்கி வருகின்றன.  இவ்வாறு நடத்த அந்த பகுதியை பொறுத்து ரூ. 12000 முதல் ரூ. 17000 வரை ஒவ்வொரு மாதமும் லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த லஞ்சப் பணத்தை அதிகாரிகள் இரட்டிப்பாக்கியதால் இந்த விவகாரம் தற்போது வெளிவந்துள்ளது.  இவ்வாறு லஞ்சக் குற்றம் செய்த 10 டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் 7 காவல்துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது.   இவர்கள் இவ்வாறு லஞ்சம் பெற்று சட்டவிரோத பார்கள் நடத்த அனுமதித்ததால் அரசுக்கு ஏராளமான பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மாமல்லபுரம் போன்ற சுற்றுலாத் தலங்களில் அனுமதி இன்றி நடப்பது மிகவும் தவறானதாகும்.   இதைப் போல் பல சுற்றுலாத்தலங்களிலும் அனுமதி இன்றி பார் நடந்து வருகின்றன.  தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனுமதி இல்லாத பார்களை மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  இது குறித்த விரிவான அறிக்கை விரைவில் அரசுக்கு அனுப்பப்படும்” என தெரிவித்துள்ளார்