திராவிடர் விடுதலை கழக பிரமுகர் படுகொலை! கோவையில் பதட்டம்!

 

 

ஃபாரூக்..

கோவை:

திராவிடர் விடுதலை கழக பிரமுகர் ஃபாருக் நேற்று இரவு கோவையில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவுகிறது.

கோவை உக்கடம் லாரி பேட்டை மீன்மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த  ஃபாரூக். (வயது 32) இரும்பு வியாபாரம் செய்துவந்தார். அவருக்கு ரஷீதா என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.

திராவிடர் விடுதலை கழகத்தில் ஃபாரூக் தீவிரமாக இயங்கி வந்தார்.

இந்த நிலையில் உக்கடம் பேருந்து நிலையம் அருகில் நேற்று இரவு 10.45 வரை ஃபாரூக் தனது நண்பர்களுன் பேசிக்கொண்டிருந்தார். பிறகு வீட்டுக்குச் சென்றார். சிறிது நேரத்தில் அவரது செல்போனுக்கு அழைப்பு வந்திருக்கிறது. பேசிய அவர். தனது மனைவயிடம், மீன்மார்க்கெட் வரை  சென்று வருவதாகக் கூறி கிளம்பினார்.

சடலமாக..

அங்கு திடீரென அவரை சூழ்ந்த மர்ம கும்பல் ஒன்று அரிவாள் மற்றும் கொடூர ஆயுதங்களால் வெட்டிக்கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்டது. தற்போது ஃபாரூக் உடல் கோவை மாவட்ட தலைமை  மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

கோவை மாவட்ட திராவிடர் விடுதலை கழக மாவட்டச் செயலாளர் நிர்மல் குமாரை தொடர்புகொண்டு பேசினோம். அவர், “பெரியார் கொள்கையில் மிகத் தீவிர பற்று கொண்டிருந்தார். ஃபாரூக். பகுத்தறிவு மற்றும் கடவுள் மறுப்பு பிரச்சாரங்களில் ஈடுபட்ட அவர், தி.வி.க. நடத்தும் போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றிருக்கிறார். அவரது மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை” என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

ஃபாரூக் முகநூல் பதிவு ஒன்று..

மேலும் அவர், “தனிப்பட்ட முறையில் ஃபாரூக்குக்கு எதிரிகள் யாரும் கிடையாது.  இந்த பாதகச் செயலை யார் செய்தார்கள் என்று தெரியவில்லை. இஸ்லாமியரான அவர் கடவுள் மறுப்பு கொள்கையில் தீவிர ஈடுபாட்டுடன் இருந்ததால், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் செய்திருக்கலாம். அதே நேரம் கோவையில் இந்து அடிப்படைவாதிகளும் தீவிரமாக செயல்படுகிறார்கள். ஆகவே அவர்களது செயலாகவும் இது இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published.