மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் பிராவோ ஓய்வு அறிவிப்பு!

சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து மேற்கு இந்திய தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Bravo

இந்தியா வந்துள்ள மேற்கு இந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் 2 டெஸ்டிலும் இமாலய வெற்றி பெற்ற இந்திய அணி, 2-0 என தொடரை கைப்பற்றி அசத்தியது. தற்போது 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து நேற்று நடந்த 2வது ஒருநாள் போட்டி டிராவில் முடிந்த நிலையில், இந்திய அணி 1-0 என்று முன்னிலையில் உள்ளது.

இதற்கிடையில், இந்தியா வந்துள்ள மேற்கு இந்திய தீவுகள் அணியில் இடம்பெறாத சிறந்த ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ (35) சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2004ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் மூலம் சர்வதேச போட்டியில் அறிமுகமானார். இதையடுத்து, கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி மேற்கு இந்திய தீவுகள் அணியில் இடம்பெற்று கடைசியாக ஒருநாள் போட்டியில் பிராவோ விளையாடினார். கடந்த 2016ம் ஆண்டுக்குப் பிறகு பிராவோ எந்தப் போட்டியிலும் விளையாடாமல் இருந்துள்ளார்.

இது குறித்து டுவைன் பிராவோ கூறுகையில், டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டி என்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன். கிட்டத்தட்ட 14 வருட கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகு இப்போது ஓய்வு பெறுகிறேன். இங்கிலாந்து அணிக்கு எதிரான நான் விளையாடிய முதல் போட்டியை என்னால், மறக்க முடியாது.

மேலும், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் நான் மற்ற போட்டிகளில் விளையாடுவேன். கிரிக்கெட் தான் எனது மகிழ்ச்சி என்று பிராவோ கூறியுள்ளார். 66 டி20, 164 ஒரு நாள் போட்டி மற்றும் 40 டெஸ்ட் போட்டிகள் உள்பட இதுவரை 270 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பிராவோ விளையாடி உள்ளார். மேலும், ஒரு நாள் போட்டிகளில் 2,968 ரன்களும், 199 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். டி20 போட்டியில் மட்டும் 1142 ரன்களை பிராவோ எடுத்துள்ளார்.