அரசு அலுவலகங்களில் ஆன்லைன் நடைமுறை! அரசு அலுவலர்கள் கூட்டமைப்புக்கு நிதித்துறை செயலாளர் கடிதம்

சென்னை:

ரசு அலுவலகங்களில் ஆன்லைன் நடைமுறை அமல்படுத்தப்படும், அதில் உள்ள பிரச்சினைகள் எதிர்காலத்தில் சரி செய்யப்படும் என்று  அரசு அலுவலர்கள் கூட்டமைப்புக்கு நிதித்துறை செயலாளர் கடிதம் எழுதி உள்ளார்.

காகித பயன்பாட்டை குறைத்து,  ஆன்லைன் நடைமுறைக்கு வர அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. தமிழகத்திலும், அரசு அலுவலகங்களில் காகித பயன்பாட்டை குறைப்பதற்காக ஆன்லைன் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசும் முயற்சி எடுத்து வருகிறது.

தமிழகத்தில் அரசு அலுவலக நடைமுறைகள், பணபரிவர்த்தனைகளை ஆன்லைன் மூலமாக செயல்படுத்தும் புதிய திட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பரிட்சார்த்த முறையில் செயல்படுத்தப்பட்டது. இ-ஆபீஸ் என்ற சாப்ட்வேர் உதவியுடன், அனைத்து வகை அரசு அலுவலக பணிகளும், காகித பயன்பாடு இல்லாமல், கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் மொபைல் போன் மூலம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அலுவலக பணியாளர் வருகைப் பதிவில் துவங்கி, கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பிப்பது வரை, அனைத்துப் பணிகளும், ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும்.

ஆனால், இந்த நடைமுறைக்கு  அரசுக்கு அரசு அலுவலர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இதுகுறித்து  முதலமைச்சர் தனிப்பிரிவிலும் மனு அளித்தனர்.

இந்த நிலையில்,  நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் பதில் கடிதம் எழுதி உள்ளார். அதில், புதிய நடைமுறையை செயல்படுத்து வதில் ஏற்படும் சிக்கல்களை எதிர் காலத்தில் சரி செய்து கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த செயல்முறையை கைவிடுவது அடுத்து வரும் திட்டங்களுக்கு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என தெரிவித்துள்ளார்.