இ-பாஸ் முறைகேடு: ரத்த தாகம் கொண்டு ஓநாய்கள் போல செயல்படும் அரசு ஊழியர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குங்கள்…

சென்னை: கொரோனா போன்ற இக்கட்டான காலக்கட்டத்திலும், இ-பாஸ் வழங்க லஞ்சம் பெறும் ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல செயல்படும் அரசு ஊழியர்களை கண்டறிந்து, அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நூற்பாலை ஒன்றில் சட்டவிரோதமாக  பணியில் அமர்த்தப்பட்டுள்ள  திருவண்ணாமலையைச் சேர்ந்த பள்ளி மாணவிகளை மீட்கக்கோரி  தமிழ் தேசிய மக்கள் கட்சி தலைவர் சி.எம்.சிவபாபு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு  நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து இ-பாஸ் பெறாமல், அந்த  மாணவிகள்  திருப்பூர் மாவட்டம் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்பட்டது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், முறையாக விண்ணப்பித்தவர்களே இ பாஸ் பெற இயலாத நிலையில், இடைத்தரகர்கள் மூலம் ரூ.500 முதல் ரூ.2 ஆயிரம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு அதிகாரிகள், இ பாஸ்கள் வழங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது என்றும்,

கொரோனா போன்ற இக்கட்டான  காலத்திலும், ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல செயல்படும் அரசு ஊழியர்களை இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், திருப்பூர் நூற்பாலைகளில் இருந்து மீட்கப்பட்ட மாணவிகளை குழந்தைகள் நலக் குழுக்கள் மூலம் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுகின்ற னரா என கண்காணிக்க திடீர் சோதனைகள் நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்டு 20ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.