ஊட்டி: வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து நீலகிரி வர விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று தெரிவித்த கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, உரிய ஆவனங்களுங்ன விண்ணப்பிக்கும் நபர்களுக்கே இ-பாஸ் கிடைக்கும் என்று அறிவித்து உள்ளார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதுகுறித்துஆய்வு நடத்திய மாவடட ஆட்சியர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால், அந்த பகுதிகளில்  3 வீடுகள் சேதமடைந்து உள்ளன.  சேதமடைந்த வீடுகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அபாயகரமான இடங்களை கண்டறிந்து அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தி கண்காணித்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்ததை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. கனமழையால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

தற்போது கொரோனா பொதுமுடக்கத்தில் இருந்து மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ள தளர்வுகள் காரணமாக நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, உள்ளூர் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முககவசம் அணிவது என தங்களை தற்காத்துக் கொள்வது அவசியம்.

கொரோனா அச்சம் காரணாக, நீலகிரி மாவட்டத்தில்  பைன் பாரஸ்ட், தொட்டபெட்டா, படகு இல்லம் போன்ற சில  சுற்றுலா தலங்கள் திறக்க அனுமதி இல்லை என்று தெரிவித்த துடன், தமிழகத்தின் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வருகிறவர்கள் உரிய ஆவணங்களை ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே அவர்களுக்கு  இ-பாஸ் வழங்கப்படும். உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்கும் என்றவர்,  உள்ளூர் மக்கள் ஆதார் அடையாள அட்டையை காண்பித்து வெளிமாவட்டங்களில் இருந்து வரலாம் என்று கூறினார்.