சென்னை:

சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருவதால், சென்னை யிலிருந்து வெளியூர் செல்வோருக்கு இ-பாஸ் அனுமதி வழங்குவது நிறுத்த உத்தரவிடப்பட்டு இருப்பதாக கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு. திருள்ளூர் மாவட்டங்களிலிருந்து செல்வோருக்கும் இ-பாஸ் தர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் நேற்று (10ந்தேதி)புதிதாக 1,927 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுவே இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பாதிப்பு. இதன் காரணமாக  மொத்த பாதிப்பு எண்ணிக்கை  36,841 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்புக்குள்ளானோர்  எண்ணிக்கை 25,937 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக, ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முயற்சி செய்து வருகின்றனர். ஏற்கனவே சுமார் 8லட்சம் பேர் சென்னையில் இருந்து வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு சென்றுவிட்ட நிலையில், தற்போது அதிகரித்து வரும் கொரோனா பீதி காரணமாக, தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக் கானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊரடங்கு காலத்தின்போது, அவசர தேவைகளுக்கு இ-பாஸ் வசதி  தமிழக அரசால் வழங்கப்பட்டு வந்தது. அதன்படி,  இந்த சேவை மூலம் திருமணம், இறப்பு, மருத்துவ பரிசோதனை போன்ற காரணங்களுக்காக மட்டும் மாவட்டம் விட்டு  மாவட்டங்கள் செல்ல அனுமதி கொடுக்கப்பட்டு வந்தது.

நிலையில், தளர்வு அறிவிக்கப்பட்டதில் இருந்து, இ-பாஸ் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வெளி மாவட்டங்களில் மீண்டும் கொரோனா தொற்று தலை தூக்கி உள்ளது.

இதையடுத்து,  சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய  மாவட்டங்களில் இருந்து பிற மாவட்டங்களுக்குள் செல்ல இ பாஸ் அனுமதி கொடுக்க வேண்டாம் என தமிழக  அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே மாவட்டம் விட்டு  மாவட்டங்கள் செல்ல அனுமதி கொடுக்கப்போவதாகவும் மற்ற காரணங்களும்  அனுமதிக்கக் கூடாது என தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு சார்பில் எந்தவித அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது