டிசம்பர் முதல் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் மின்னணு முறை கட்டணம்?

புதுடெல்லி: இந்தாண்டின் டிசம்பர் மாதம் முதற்கொண்டு, நாட்டிலுள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை முழுமையாக அமல்படுத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்பொருட்டு, அதிகளவிலான ஊழியர்களைப் பணிக்கு அமர்த்த, மத்திய அரசு முடிவுசெய்துள்ளதாம்.

தற்போதைய நிலையில், பல இடங்களில், சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்டவரிசையில் நிற்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, பயணத்தின்போது, பல சுங்கச்சாவடிகளை இதுபோன்று கடந்துசெல்ல வேண்டிய நிலை ஏற்படுவதால், பலருக்கு உரியநேரத்தில் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றுசேர முடிவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டநாட்களாக உள்ளது.

பயணிகள் போக்குவரத்து மட்டுமின்றி, சரக்குப் பபோக்குவரத்தும் பாதிப்புக்கு உள்ளாகிறது. எனவே, மின்னணு மூலம் கட்டணம் வ‍சூலிக்கும் முறை அமல் செய்யப்பட்டது. ஆனால், இந்தப் புதிய நடைமுறை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சுங்கச் சாடிவகளில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது.

இதன்படி ‘பாஸ்டேக்’ என்ற கார்டைப் பொருத்த வேண்டும். இந்தக் கார்டை குறிப்பிட்ட விலைக்கு வாங்கி, தேவைக்கேற்ப ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்தக் கார்டுகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் சுங்கச் சாவடிகளைக் கடந்து செல்லும்போது, ரேடியோ அதிர்வலைகள் மூலம் செலுத்தப்பட வேண்டிய தொகை தானாகவே கழித்துக் கொள்ளப்படும்.

எனவே, இத்திட்டத்தை டிசம்பர் மாதம் முதல், நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.