அடையாறு மண்டலத்தில் ‘இ – வேஸ்ட்’ சேகரிப்பு மையம் மீண்டும் திறப்பு…

அடையாறு: அடையாறு மண்டலத்தின் தூய்மை பணி கடந்த ஆண்டு தனியாருக்கு வழங்கப்பட்ட நிலையில், இவேஸ்ட் எனப்படும் மின்னணு சாதன பொருட்கள் சேகரிக்க தனி மையம் அமைக்கப்பட்டிருந்தது. பின்னர், அது கொரோனா காலத்தில் மூடப்பட்டது. இந்த நிலையில், தற்போது,   ‘இ – வேஸ்ட்’ எனப்படும், மின்சாதன சேகரிப்பு மையம், மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில்  ”பெருநகர சென்னை மாநகராட்சியின் 7 மண்டலங்களில் குப்பை அள்ளும் பணிகள் தனியாருடன் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி, சுமார் 9 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என கூறப்பட்டது.  அதன்படி,  ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த உர்பேசர் நிறுவனம் மற்றும் நமது நாட்டின் சுமீத் பெசிலிடீஸ் லிம்டெட் ஆகிய இரு நிறுவனங்கள் அதற்கான 8 ஆண்டு கால  ஒப்பந்தங்களை பெற்றுள்ளன.
அதைத்தொடர்ந்து  பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திஇ , குப்பை தரம் பிரித்து அளிக்கவும், குப்பைகளை மறு உபயோகம் செய்தல் மற்றும் மறு சுழற்சிக்கு உட்படுத்தி குப்பை உருவாகும் அளவினைக் குறைக்கவும் குடியிருப்பு நலச்சங்கங்கள், பல்வேறு அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன.
அதன்படி சென்னை அடையாறு மண்டலமும் தனியார் வசம் சென்றது. அங்குள்ள 13 வார்டுகளில், 2,020 தெருக்கள் உள்ளன. இந்த பகுதியில்,  குப்பை கையாளும் பணியை, ‘உர்பசர்சுமித்’ நிறுவனம் செய்து வருகிறது. தினமும், 530 டன் குப்பை சேகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
குப்பைகளை சேகிரிப்பதற்காக, 2,226 தொட்டிகள், 510 பேட்டரி வாகனங்கள், 24 காம்பாக்டர் லாரிகள்  பயன்படுத்தப்படுவதுடன்,  மூன்று, ‘ஷிப்ட்’ முறையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சுமார் இதற்காக, 700 துாய்மை  பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர். அவர்கள் மக்கும் குப்பையை தரம் பிரித்து, உரம், எரிவாயு தயாரிக்கப்படுகிறது.  மேலும், துணி, ரப்பர், கண்ணாடி, டயர் போன்ற இதர கழிவுகள், தனித்தனியாக சேகரிக்கப்படுகின்றன. இதற்காக, குறிப்பிட்ட இடங்களில், தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
அதுபோல, ‘இ – வேஸ்ட்’ எனப்படும் மின்சாதன கழிவுகளை, தனியாக சேகரிக்க, வார்டு வாரியாக மையம் திறக்கப்பட்டது.  இந்த மையங்கள் கொரோனா  பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஆண்டு மூடப்பட்டது. இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று,  மீண்டும், வார்டு வாரியாக, ‘இ – வேஸ்ட்’ சேகரிப்பு மையம்  தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த இ-வேஸ்ட் மையத்தில், பழுதடைந்த கம்ப்யூட்டர் சாதனங்கள், வீட்டில் உள்ள பழுதடைந்த ‘கொசு பேட், பழுதடைந்து பயன்படுத்த முடியாத ரேடியோ, டிவி, கணினி, அயர்ன் பாக்ஸ்’ போன்ற மின்சாதன கழிவு களை, அந்தந்த வார்டு அலுவலகத்தில் வழங்கலாம் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.