தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேருக்கும் தலா ரூ.5 கோடி? தங்கத்தமிழ் செல்வன்

சென்னை:

சிகலா ஒவ்வொருக்கும் ரூ.5 கோடி தந்திருந்தால் தீபாவளியை சந்தோஷமாக கொண்டாடி இருப்போம் என்று அவரது தீவிர ஆதரவாளரான தங்கத்தமிழ்செல்வன் தெரிவித்து உள்ளார்.

அதிமுக அரசுக்கு எதிராக குரல்கொடுத்த சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தை சென்னை உயர்நீதி மன்றமும் உறுதி செய்தது.

இந்த நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்எல்ஏக்கள் பலர் மீண்டும் ஈபிஎஸ், ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவில் ஐக்கியமாக இருப்பதாக பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், அவர்களை அழைத்துக்கொண்டு டிடிவி தினகரன் பெங்களுர் விரைந்தார். கடந்த அவர்கள் அனைவரும் பெங்களூரு சிறைக்கு சென்று, சசிகலாவை சந்தித்து பேசினர்.

அப்போது அவர்களுக்கு ஆறுதல் கூறிய சசிகலா ஒவ்வொருக்கும் தலா ரூ.10 கோடி கொடுக்க டிடிவியிடம் கூறியதாகவும், அவர்கள் தொடர்ந்து தங்களுக்கே ஆதரவு வழங்க வேண்டும்  என்றும்,  எடப்பாடி அரசுக்கு தொடர்ந்து குடச்சல் கொடுத்து வர வேண்டும் என்றும் உறுதிமொழி வாங்கி இருப்பதாகவும்  சமூக வளைதளங்களில் தகவல்கள் பரவின.

அதற்கேற்றால்போல தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் தற்போது அமைதியாக இருந்து வருகின்றனர். இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ள நிலையில், இதுகுறித்து டிடிவியின் தீவிர ஆதரவாளரான தங்கத்தமிழ் செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் மற்றும் கருணாஸ் ஆகிய ஒவ்வொருவருக்கும் தலா ரூ.5 கோடி கொடுக்கப்பட்டதாகவும், ரூ. 10 கோடி கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அப்படி தரப்பட்டிருந்தால் நாங்கள்  சந்தோஷமாக தீபாவளியை கொண்டாடி இருப்போம் என்று கூறினார்.

விருதுநகரில்  செய்தியளார்களை சந்தித்தபோது அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் இதை தெரிவித்தார்.

மேலும், இரட்டை இலை சின்ன விவகாரத்தில், போனில் பேசி பணம் கொடுக்க முயன்றதாக, துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மீது ஓராண்டுக்கு முன் வழக்கு தொடர்ந்தனர். சரி, பேசியதாகவே ஒப்புக் கொள்கிறோம். ஆனால், யாரிடம் பேசினார். தேர்தல் ஆணையத்திடம் எவ்வளவு பணம் கொடுத்தார்; யாருக்கு கொடுத்தார் என சிபிஐ நீதிமன்றம் ஏன் வெளியிட வில்லை என்றவர்,  இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி மனுச் செய்தோம். அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. மேல்முறையீட்டு வழக்கில் டிச. 4ம் தேதி ஆஜராகிறார். அதில் குற்றமற்றவர் என நிரூபித்து வெளியே வருவார் என்று கூறினார்.

தமிழகத்தில் காலியாக உள்ள  20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திக்க அமமுக தயாராக உள்ளது. அதிமுக தயாராக உள்ளதா? என்று கேள்வி எழுப்பியவர்,  கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை டிடிவி தினகரன் விரைவில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவார் என்று தெரிவித்தார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.