சென்னை

குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து தமிழக அமைச்சர்கள் வெவ்வேறு கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.   பல மாநிலங்களில் கடும் போராட்டம் நடந்து வன்முறை வெடித்துள்ளது.   இந்நிலையில் மத்திய அரசு தேசிய குடியுரிமை பதிவேட்டை அமல்படுத்த உள்ளதாக மற்றொரு தகவல்  தெரிவித்துள்ளது.   பல மாநில முதல்வர்கள் தங்கள் மாநிலத்தில் குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றை அமல்படுத்தப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.

ஆனால் தமிழகத்தை ஆளும் அதிமுக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இந்த திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தது.  இது நாடெங்கும் கடும் அதிருப்தியை உண்டாக்கியது.   ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த சட்டத் திருத்தம் இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பு அளிக்காது என மத்திய அரசு உறுதி அளித்ததன் பேரில் ஆதரவு அளித்ததாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த தமிழக அமைச்சர் நிலோஃபர் கஃபீல் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தின் போது குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகக் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.  அத்துடன் இது குறித்து தாம் முதல்வரிடம்  ஏற்கனவே பேசி உள்ளதாகவும் அவர் சிறுபான்மையினருக்கு எதிரான இந்த சட்டத்திருத்தம் தமிழகத்தில் அமலாக்கப்படாது உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில் மற்றொரு அமைச்சரான மாஃபா பாண்டியராஜன், “குடியுரிமை சட்டத் திருத்தம் ஒவ்வொரு மாநிலமும் அமல்படுத்த வேண்டும்.   அதை ஏன் அமலபடுத்தக் கூடாது என்பதற்குச் சரியான காரணம் என்ன என்பது எனக்குத் தெரியவில்லை.   இதற்கான விதிமுறைகளை மத்திய அரசு இன்னும் உருவாக்கவில்லை.  அவ்வாறு உருவாக்கப்பட்டால் அனைத்து மாநிலங்களும் அதை அமல்படுத்தியே ஆக வேண்டும்.  அதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.

அதை போலவே தேசிய குடியுரிமை பதிவேடும்  அவசியமாக்கப்பட்டால் எல்லா மாநிலங்களும் அமல்படுத்த வேண்டியது அவசியமாகும்.  இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தவறாகும்.  வெளிநாட்டினர் ஊடுருவதை தடுக்க அனைத்து குடிமக்களும் தங்களை இந்த பட்டியலில் இணைத்துக் கொள்ள வேண்டும்.  எந்த நாட்டிலும் இப்படி ஒரு பட்டியல் இதுவரை இல்லாததால் இது நமது நாட்டுக்குப் பெருமை தேடித் தரும் விஷயமாகும்” எனக் கூறி உள்ளார்.

ஒரே மாநிலம் மற்றும் ஒரே கட்சியைச் சேர்ந்த இரு அமைச்சர்களின் வெவ்வேறு விதமான கருத்துக்கள் நாட்டில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.