டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் திடீர் நிலநடுக்கம்! பொதுமக்கள் பீதி, சாலைகளில் தஞ்சம்

டெல்லி: தலைநகர் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர்.


இந்தியா, நேபாள எல்லையை மையமாகக் கொண்டு, நேபாள நாட்டின் டெய்லக் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில், 14 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக ஸ்கை மெட் வானிலை ஏஜென்சி அறிவித்து இருக்கிறது.
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லி மட்டுமல்லாது, உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. லக்னோவிலும் நிலநடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. பீதி அடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ, பொருள் இழப்புகளோ ஏற்பட்டு இருக்கிறதா என்பது குறித்து எவ்வித தகவல்களும் வெளியாக வில்லை.