லடாக் பகுதியில் 5.4 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்: கட்டிடங்களில் விரிசல்

--

லடாக்: லடாக்கில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

இன்று மாலை சரியாக 4.27 மணியளவில் இந்த நிலநடுக்கம் லடாக்கை உலுக்கியதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் கூறி உள்ளது. இந்த நில நடுக்கத்தின் மையப்பகுதி லேவுக்கு வடகிழக்கில் 129 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது என்றும், 10 கிலோமீட்டர் ஆழத்தில் தோன்றியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் கட்டிடங்களில் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாக லே பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை ஏதேனும் உயிர் இழப்புகளோ, யாருக்கேனும் காயமோ ஏற்பட்டதாகவோ விவரங்கள் வெளியாகவில்லை.

இந்த வாரத்திற்குள் இப்பகுதியில் ஏற்பட்ட 2வது நிலநடுக்கம் இதுவாகும். முன்னதாக புதன்கிழமை, ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகரில் 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, குறிப்பிடத்தக்கது.