பெங்களூரு

பிரபல கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் தேர்தல் ஆணைய நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரான ராகுல் டிராவிட் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் ஆவார்.  தற்போது அவர் 19 வயதுக்கு கீழுள்ள இளம் கிரிக்கெட் வீரர்கள் அணிக்கு பயிற்சியாளராக இருக்கிறார்.   இவர் பெங்களூரு நகரில் வசித்து வருகிறார்.   இவர் தற்போதைய மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்களவை தேர்தல்  7 கட்டமாக ஏப்ரல் 11 முதல் மே 19 வரை நடைபெற உள்ளது.    இந்த வாகுகள் மே 23 எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.   பெங்களூரு நகரில் வரும் 18 ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.   இந்த நகருக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகி உள்ளது.

அந்த பட்டியலில் தேர்தல் ஆணைய நல்லெண்ண தூதரான ராகுல் டிராவிட் பெயர் நீக்கப்பட்டுள்ளது.   இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.   ராகுல் டிராவிட் மற்றும் அவர் மனைவி விஜேதா இருவரும் இந்திராநகரில் முதலில் வசித்து வந்தனர்.   கடந்த வருடம் அஸ்வத் நகரில் அமைந்துள்ள தங்கள் புதிய இல்லத்துக்கு குடி பெயர்ந்தனர்.

அதை ஒட்டி அவர்களுடைய பெயர் பழைய விலாசத்துக்கான வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.    பெங்களூரு நகரில் வாக்காளர் பட்டியலில் பெயரை இணைக்க  கடந்த மார்ச் 16 ஆம் தேதி கடைசி தேதியாகும்.   டிராவிட் மற்றும் அவர் மனைவி ஆகிய இருவரும் அதுவரை விண்ணப்பிக்கவில்லை.

அத்துடன் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புக்காக ராகுல் டிராவிடின் இல்லத்துக்கு இரு முறை  சென்றுள்ளனர்.    ஆனால் அவர் வெளிநாட்டில் இருந்ததால் அவர் வீட்டுக்குள் அதிகாரிகளை அனுமதிக்கவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.

தேர்தல் ஆணைய நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ள டிராவிட் மக்கள் அனைவரையும் வாக்களுக்குமாறு கூறி வரும் வேளையில் அவருக்கே வாக்களிக்க முடியாத நிலை உள்ளது.