க்னோ

சாதி மற்றும் மதம் குறித்து பேசியதற்காக யோகி ஆதித்ய நாத் மற்றும் மாயாவதிக்கு தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமுலுக்கு வருகின்றன.    ஆனால் பல கட்சிகள் இந்த விதிகளை மீறுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.   இந்த புகார்களில் பல கட்சியின் தலைவர்களும் உள்ளனர்.

உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் ஒரு பொதுக்கூட்டத்தில் “அலியும் நம்மவரே . பஜ்ரங் பலியும் நம்மவரே.   அதாவது அலி எனப்படும் இஸ்லாமியரும் பஜ்ரங் பலி எனப்படும் மலைவாழ் மனிதரான அனுமன் என்னும் தலித்தும் நமது பக்கம் உள்ளனர்.   இருவர் வாக்கும் பாஜகவுக்கு கிடைக்கும்” என கூறினார்.

அதற்கு பதில் அளித்த பகுஜன் சமாஜ் வாதி கட்சி தலைவி மாயாவதி, “அனுமனை தலித் என சொன்னமைக்கு நன்றி.   ஏற்கனவே அலியும் பஜ்ரங் பலியும் பாஜகவை வெறுத்து ஒதுக்கி விட்டனர்.  அதனால் இஸ்லாமியர் மற்றும் தலித் ஓட்டுக்கள் எங்களுக்கு கிடைக்கும்” என உரையாற்றினார்.

இவ்வாறு  மதம் மற்றும் சாதியை மேற்கோள் காட்டி பேசியதாக இருவர் மீதும் புகார் எழுந்துள்ளது.   இதனால் நாளை காலை 6 மணியில் இருந்து 72 மணி நேரம் தேர்தல் பிரசாரம் செய்ய  யோகி ஆதித்யநாத்துக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

அத்துடன் இதைப்போலவே சாதி மற்றும் மதம் குறித்து பேசியதற்காக மாயாவதிக்கு 48 மணி நேரம் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.