மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடா? தேர்தல் ஆணையம் சவால்

டில்லி,

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடா.. நிரூபிக்க முடியுமா என்று தேர்தல் ஆணையம் பொதுமக்களுக்கு பகிரங்கமாக சவால் விட்டுள்ளது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாகவும் எனவே வாக்குச் சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் எனவும் 16 அரசியல் கட்சிகள், குடியரசுத் தலைவரிடம் முறையிட்டுள்ளன. ஆனால், மின்னணு இயந்திரம் உலகிலேயே பாதுகாப்பான தேர்தல் நடைமுறை என்றும், அதில் முறைகேடுக்கு வாய்ப்பே இல்லை என்றும் தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுத்து வருகிறது.

இதனிடையே, வாக்குப் பதிவு இயந்திரம் குறித்த விமர்சனம் வலுத்து வருவதால், டென்ஷனான தேர்தல் ஆணையம், தற்போது பகிரங்கமாக அனைவருக்கும் சவால் விடுத்துள்ளது.

மே முதல் வாரத்தில் நிபுணர்கள், விஞ்ஞானிகள், தொழில்நுட்ப நிபுணர்கள் என யார் வேண்டுமானாலும் மின்னணு இயந்திர செயல்பாட்டை மாற்றிக் காட்ட முன்வரலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

10 நாட்களுக்கு இதற்கான அவகாசம் வழங்கப்படும் என்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கு எதிர்வினை புரிந்திருக்கும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், இதனை ஏன் தேர்தல் ஆணையம் அதிகார பூர்வமாக அறிவிக்காமல், பொத்தாம் பொதுவாக ஊடகங்களில் தகவல் என்ற பெயரில் கசியவிட்டுள்ளது என கேள்வி எழுப்பி உள்ளார்.

தம்மிடம் ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தைத் தந்தால் 72 மணி நேரத்தில், வாக்குப்பதிவு முறைகேட்டை நிரூபிப்பேன் என்று அவர் கூறியிருந்தார்.