டில்லி

மூக தளங்களில் வெளிநாடு வாழ் இந்தியர் வாக்களிப்பது குறித்து பரவி வரும் தவறான தகவல் குறித்து குற்றப்பத்திரிகை பதிய காவல்துறையை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த வருடம் நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.    தேர்தல் விதிமுறைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆணையம் கூட்டம் நடத்தி உள்ளது.   வரும் மாதம் ஐந்தாம் தேதிக்குள் தேர்தல் அட்டவணை வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் லோகோவுடன் ஒரு செய்தி வாட்ஸ் அப் தளத்தில் பரவி வருகிறது.  இதில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைன் மூலம் வாக்குப் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காணப்படுகிறது.  இதை உண்மையென நம்பி பல பொதுமக்களும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த தகவல் தவறானதென மறுத்துள்ள தேர்தல் ஆணையர் காவல்துறைக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.  அந்தக் கடிதத்தில், “வரும் 2019 பொதுத் தேர்தலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க முடியும் என பொய்த் தகவல்கள் சமூக தளமான வாட்ஸ் அப், டிவிட்டர் போன்றவற்றில் பரப்ப படுகின்றன.

இந்த தகவலில் தேர்தல் ஆணையத்தில் லோகோ பதியப்பட்டுள்ளதால் பொதுமக்கள் இதை உண்மை என நம்பி ஏமாறுகின்றனர்.   எனவே இந்த தகவலை அனைத்து சமூக தளங்களிலும் இருந்து நீக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

அத்துடன் தேர்தல் விதிமுறை எண் 303ன் படி தேர்தல் குறித்து ஆணையத்தின் பெயரால் பொதுமக்கள் இடையே பரப்புவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது.  ஆகவே இந்த தகவலை உருவாக்கியோர் மற்றும் பரப்பியவர்களை உடனடியாக கண்டறிந்து அவர்கள் மீது குற்றப்பத்திரிகை பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையம் கேட்டுக் கொள்கிறாது “ என குறிப்பிட்டுள்ளது.